“23.75 கோடி ஃபிராடு.. இனியும் தப்பிக்க முடியாது” வெங்கடேஷ் ஐயரை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் வெங்கடேஷ் ஐயர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆமை வேகத்தில் விளையாடியதால் ரசிகர்கள் அவர் மீது மிகப்பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. சுனில் நரேன் 13 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். அஜிங்க்யா ரஹானே சற்று அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

நான்காம் வரிசையில் இறங்கிய வெங்கடேஷ் ஐயர், பவுண்டரி அடிக்காமல் ரஹானேவுக்கு அதிக அழுத்தத்தை அளித்தார். வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 73.68 என்பதாக இருந்தது. இதை அடுத்து, 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடும் போது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை போல வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் செய்ததாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மேலும், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 23.75 கோடிக்கு வாங்கியது அவர்களை மேலும் கோபப்படுத்தி உள்ளது. "அவ்வளவு பெரிய தொகையை வாங்கிக் கொண்டு அவர் ஏமாற்றுகிறார், ஃபிராடு வேலை செய்கிறார்" என சமூக வலைதளங்களில் பலரும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஒரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், "வெங்கடேஷ் ஐயர் உள்ளே வந்தவுடன் கொல்கத்தா அணியின் பவுண்டரிகள் நின்றுவிட்டன. அதற்கு முன்பு ரஹானே மற்றும் சுனில் நரேன் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் சரிவில் தள்ளும் முன் இந்த ஃபிராடை அணியை விட்டு நீக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு ரசிகர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வெங்கடேஷ் ஐயர் டெஸ்ட் போட்டி போல 78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ரஹானேவுக்கு அழுத்தம் அளித்து அவரது விக்கெட் பறிபோகவும் முக்கிய காரணமாக இருந்தார்" எனக் கூறியிருக்கிறார்.
மற்றொரு ரசிகர், "ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரிடம் என்ன இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அவருக்காக மாறி, மாறி ஏலம் கேட்டார்கள் என எனக்குப் புரியவில்லை" என்று கூறி இருக்கிறார். .
மற்றொரு ரசிகரோ, "வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான முடிவு" என விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications