கே.எல்.ராகுல் குறித்த மோசமான விமர்சனம்.. அந்தர் பல்டி அடித்த வெங்கடேஷ் பிரசாத்.. ரசிகர்கள் கோபம்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ரசிகர்கள் கிண்டலடித்ததால் தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி 2 - 0 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், கே.எல்.ராகுலின் ஆட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுவரை அவர் ஆடிய 3 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 38 ரன்களை மட்டுமே அடித்தார்.

வெங்கடேஷ் விமர்சனம்
கே.எல்.ராகுலின் சொதப்பல்கள் குறித்து வெங்கடேஷ் பிரசாத் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அதில், கே.எல்.ராகுலுக்கு ஒருதலைபட்சமாக ஆதரவு கொடுத்து திறமையான வீரர்களுக்கு அநீதி செய்கின்றனர். கே.எல்.ராகுலின் ஒட்டுமொத்த சராசரி வெறும் 33.4 ரன்கள் தான் ஆகும். அதுவும் அயல்நாடுகளில் 30.7 ரன்கள் தான் உள்ளது. அதுவும் இடையில் அவர் அடித்த 6 சதங்களால் வந்தவை. மற்றபடி அனைத்துமே மிகக்குறைந்த ஸ்கோர் தான் அடித்துள்ளார்.

20 ஆண்டுகளில் மோசம்
கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான ஃபார்மில் இருக்கும் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். சீனியர் வீரர் ஷிகர் தவான் டெஸ்ட் போட்டியில் சராசரியாக 40 ரன்கள் வைத்திருக்கிறார். மாயங் அகர்வால் 41 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு இரட்டை சதம் அடைத்திருக்கிறார். இதுபோன்ற திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என விமர்சித்திருந்தார். பிரசாத்தின் இந்த கருத்து, தனிப்பட்ட தாக்குதல் எனக்கூறி ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வந்தனர்.

ரசிகர்களுக்கு விளக்கம்
இந்நிலையில் ரசிகர்களின் கோபத்தால் அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில், கே.எல்.ராகுல் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பும், பிரச்சினையும் உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. அவருடைய நல்ல எதிர்காலத்திற்காக தான் கூறினேன். தற்போது இருக்கும் ஃபார்மில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் அவரின் நம்பிக்கை தான் குறைந்துவிடும்.

ஐபிஎல்-ஐ விடுவாரா?
கே.எல்.ராகுல் சிறிது காலம் இந்திய அணியில் இருந்து விலகி உள்நாட்டு தொடர்களில் விளையாடி நம்பிக்கையை பெற வேண்டும். தற்போது ரஞ்சிக்கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களும் முடிந்துவிட்டதால் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டி ஆடிவிட்டு வரலாம். சட்டீஸ்வர் புஜாரா அங்கு சென்றுவிட்டு தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் கவுண்டி கிரிக்கெட்டிற்காக அவர் ஐபிஎல் தொடரை புறக்கணிப்பாரா? என கேள்வியுடன் முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications