பரோடா: விஜய் ஹசாரே தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே அதிரடி சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார் பரோடா அணி வீரர் அமித் பாசி. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் புதுப்புது நட்சத்திரங்கள் முளைத்து வருகிறார்கள். அந்த வரிசையில், பரோடா அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் அமித் பாசி தற்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சமீபத்தில் டி20 போட்டியில் உலக சாதனை படைத்த இவர், அந்தச் சூடு ஆறுவதற்குள் விஜய் ஹசாரே தொடரிலும் சதம் விளாசி தனது நிலையான திறமையை நிரூபித்துள்ளார்.
புதன்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில், பரோடா அணியின் ஓப்பனராக களமிறங்கிய அமித் பாசி ருத்ரதாண்டவம் ஆடினார். ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 64 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.

நித்யா பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த அமித், முதல் விக்கெட்டுக்கு 30 ஓவர்களில் 230 ரன்களை குவித்து பிரம்மாண்டமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இறுதியில் 93 பந்துகளில் 127 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் பரோடா அணி 50 ஓவரில் 417 ரன்களைக் குவித்தது. கேப்டன் க்ருனால் பாண்டியாவும் தன் பங்குக்கு ஒரு சதம் அடித்தார்.
யார் இந்த அமித் பாசி என்று பார்த்தால், இவருடைய அறிமுகமே ஒரு வரலாறு தான். 2025 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிராக இவர் தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கினார்.
அறிமுகப் போட்டியிலேயே பவுலர்களை வெளுத்து வாங்கிய இவர், 55 பந்துகளில் 114 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார். அறிமுக டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பிலால் ஆசிஃப்பின் சாதனையை இவர் சமன் செய்தார். ஆண்கள் டி20 வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 10-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அமித் பாசிக்கு சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்க நீண்ட காலம் ஆனாலும், கிடைத்த வாய்ப்பை இரு கரம் கொண்டு பற்றிக் கொண்டார். குறைந்த போட்டிகளே விளையாடி இருந்தாலும், டி20 கிரிக்கெட்டில் 207.27 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் (List A) 140.81 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல. ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா வரிசையில் பரோடாவில் இருந்து மற்றுமொரு அதிரடி மன்னன் கிளம்பிவிட்டார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.