For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஹசாரே கோப்பை.. விதர்பா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.. சவுராஷ்டிரா தோல்வி

விஜய் ஹசாரே டிராபி இறுதிப்போட்டியில் சௌராஷ்டிராவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி தனது முதல் கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த விதர்பா, அத்தர்வா டைடின் அபார சதத்தால் 317 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை துரத்திய சௌராஷ்டிரா, கடுமையாகப் போராடிய போதிலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் 279 ரன்களில் ஆட்டமிழந்தது.

2024-25 சீசனில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த விதர்பா, இம்முறை வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் கனவை நனவாக்கியது. பிரம்மாண்டமான 317 ரன்கள் இலக்கு சௌராஷ்டிராவுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. எதிரணியின் திறமையான வேகப்பந்துவீச்சும், பனிப்பொழிவையும் மீறி களமிறங்கிய விதர்பா, சௌராஷ்டிராவை வெற்றிகரமாக முறியடித்தது.

காயம் காரணமாக முக்கிய வீரர் துருவ் ஷோரே இல்லாமல் விதர்பா களமிறங்கினாலும், அந்த அணி சிறப்பாக ஆடியது. அமன் மோக்டேவும், அதிரடி வீரர் அத்தர்வாவும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.

அமன் மோக்டே 33 ரன்கள் எடுத்த நிலையில், அன்குர் பன்வாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு விஜய் ஹசாரே சீசனில் அதிக ரன்கள் குவித்த என். ஜெகதீசனின் சாதனையை சமன் செய்வதற்கான அரிய வாய்ப்பை அவர் 17 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தார். அதன் பிறகு மூன்றாவது வீரராகக் களமிறங்கிய யஷ் ரத்தோட் (54 ரன்கள்), டைடுவுடன் இணைந்து ஆட்டத்தை நிலைப்படுதி, ரன்களைச் சேர்த்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் சௌராஷ்டிரா பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்தது.

அத்தர்வா 66 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அதன்பின் அதிரடிக்கு மாறினார். அடுத்த இரண்டு ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை விளாசி, ரசிகர்களைக் கவர்ந்தார். 118 பந்துகளில் 128 ரன்கள் குவித்த அவருக்கு இது மூன்றாவது லிஸ்ட் ஏ சதம் ஆகும். 2021-ல் ஆந்திராவுக்கு எதிராக அடித்த 164 ரன்களுக்குப் பிறகு வந்த முதல் சதம் என்பது குறப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

டைடு ஆட்டமிழந்த பிறகு, சௌராஷ்டிராவின் பந்துவீச்சாளர்களான அன்குர் பன்வார் (4-65) மற்றும் சாகரியா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக விதர்பா கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது எதிர்பார்க்கப்பட்டதிலிருந்து சற்று குறைவுதான் எனினும், ஆட்ட முடிவில் இந்த ஸ்கோர் சௌராஷ்டிராவுக்கு ஒரு பெரிய சவாலாகவே அமைந்தது.

318 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சௌராஷ்டிரா, தொடக்க வீரர்களான விஸ்வராஜ் ஜடேஜா (முந்தைய ஆட்டத்தில் 165 ரன்கள் எடுத்தவர்) மற்றும் ஹர்விக் தேசாய் ஆகியோரை விரைவாக இழந்த போதிலும், வெற்றியைத் துரத்த முடியும் என்று திடமாக நம்பியது. கடைசி 15 ஓவர்களில் 127 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆறு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது அவர்களுக்கு சாதகமாகத் தோன்றியது. எனவே அவர்கள் நம்பிக்கையுடன் ஆடத் தொடங்கினர்.

ஆனால் விதர்பாவின் கேப்டன் ஹர்ஷ் துபே, தனது அபார பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 38வது ஓவரில் பிரேரக் மன்கடை 88 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்த இந்த விக்கெட், சௌராஷ்டிராவின் வெற்றிப் பாதைக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. இது விதர்பா அணிக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.

மன்கட் வெளியேறிய பிறகு, வெற்றிக்கான சுமை சிராக் ஜானியின் தோள்களில் விழுந்தது. அவர் 64 ரன்கள் குவித்து அபாரமாகப் போராடினார். கடைசி ஏழு ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டிய தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்ட போது, அவர் ரிஸ்க் எடுக்கத் தொடங்கினார். இருப்பினும், விதர்பாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு அவருக்கு கடும் சவாலாக அமைந்தது.

அந்த முக்கியமான தருணத்தில், தார்ஷன் நால்கந்தே ஒரு அற்புதமான ஸ்லோ டெலிவரியை வீசி, ஜானியை ஆட்டமிழக்கச் செய்தார். கடினமான அந்த பந்தை ஜானி தூக்கி அடிக்க முயன்றபோது, லாங் ஆஃபில் நின்ற அமன் மோக்டே பந்தைப் பிடித்து சௌராஷ்டிராவுக்கு மரண அடி கொடுத்தார். இந்த விக்கெட்டுக்குப் பிறகு சௌராஷ்டிராவின் ரன் சேஸ் முற்றிலும் தடம்புரண்டது, வெற்றி வாய்ப்புகள் குறைந்தன.

முடிவில், யஷ் தாகூர் (4-50) ஜெய்தேவ் உனட்கட் மற்றும் ருச்சித் அஹிர் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து விதர்பாவின் வெற்றியை உறுதி செய்தார். சௌராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. விதர்பாவின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான சிறந்த திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சி, அவர்களுக்கு மதிப்புமிக்க முதல் விஜய் ஹசாரே கோப்பையைப் பெற்றுத் தந்தது.

Story first published: Sunday, January 18, 2026, 23:58 [IST]
Other articles published on Jan 18, 2026
English summary
Vidarbha Clinches Maiden Vijay Hazare Trophy Title After Defeating Saurashtra In Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+