ராஜ்கோட் : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றில் ஹரியானாவிடம் தமிழக அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தத் தொடரில் தமிழக அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை குவித்து வந்த நிலையில் அரையிறுதியில் ஹரியானாவிடம் வீழ்ந்தது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹரியானா அணிக்கு தமிழக வீரர் நடராஜன் கடும் நெருக்கடி கொடுத்தார்.

முதல் சில ஓவர்களில் ஹரியானா வீரர்களால் பந்தை தொடக்கூட முடியவில்லை. தொடக்க வீரர் அங்கீத் குமார் 12 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் மற்றும் ஹிமான்சோ ரானா பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிந்து மீட்டனர்.யுவராஜ் சிங் 65 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் பெவிலியன் திருப்பினார்.
சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து 7 ரன்களிலும் ரோகித் சர்மா 17 ரன்களிலும் ராகுல் திவாட்டியா 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, சிறப்பாக விளையாடிய ராணா மட்டும் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடந்தார். இதன் மூலம் ஹரியானா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. தமிழக பந்துவீச்சு தரப்பில் நடராஜன் பத்து ஓவர்கள் வீசி 79 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோன்று வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதனை அடுத்து 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பாபா அப்ரஜித் 7 ரன்களிலும் ஹரி நிஷாந்த் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழக்க நாராயன் ஜெகதீசன் 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
அதேபோன்று நட்சத்திர வீரர் விஜய் சங்கர் 23 ரன்களுக்கு வெளியேற பாபா இந்தரஜித் மட்டும் போராடி 24 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட முற்பட்டு மூன்று சிக்ஸர்களுடன் 35 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார். சாய் கிஷோர் இறுதியில் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் என 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷாருக்கான் 13 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் தமிழக அணை 47.1வரில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.