மாபெரும் வரலாறு படைத்த சேப்பாக்கம் நாயகன்.. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பிரம்மாண்ட நாட் அவுட் சாதனை
விசாகப்பட்டினம்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்த கருண் நாயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். அவர் மீண்டும் உலக சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
சேப்பாக்கத்தில் அடித்த அந்த முச்சதத்திற்கு பின் கருண் நாயருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரை இந்திய அணி ஓரங்கட்டி விட்டது. இந்த நிலையில் அவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் உலக சாதனை படைத்து மிரள வைத்து இருக்கிறார்.

உள்ளூர் அளவில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் உள்ளூர் அளவில் நடக்கும் ஒருநாள் போட்டிகள் லிஸ்ட் ஏ போட்டிகள் என அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் விதர்பா அணியின் கேப்டனாக கருண் நாயர் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனவரி 3 அன்று நடந்த போட்டியில் உத்தர பிரதேச அணிக்கு எதிராக சதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது மூன்றாவது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார்.
ஆனால், இது முக்கிய சாதனை அல்ல. அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஐந்தாவது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் பிரம்மாண்டமான சாதனை ஆகும்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் கருண் நாயர். இந்த தொடரில் அவர் தான் ஆடிய முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக 112 ரன்கள் எடுத்தார். அடுத்து சட்டீஸ்கர் அணிக்கு எதிராக அதிரடியாக 44 ரன்கள் குவித்தார். அதன் பின் சண்டிகர் மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு எதிராக 163 மற்றும் 111 ரன்களை எடுத்தார். இந்த நான்கு போட்டிகளிலும் அவர் நாட் அவுட் ஆக இருந்தார்.
அதன் பின் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்த தொடரில் கருண் நாயர் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார். லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையே சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் உள்ளூர் போட்டிகளில் இதற்கு முன்பு சிறப்பாக செயல்பட்ட போதும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications