உலக சாதனையை சமன் செய்த 24 வயது விதர்பா வீரர் அமன் மொகாதே.. விஜய் ஹசாரே தொடரில் சம்பவம்
பெங்களூரு: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை விதர்பா அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அமன் மோகதே, பெற்றுள்ளார். அவர் இந்த மைல்கல்லை வெறும் 16 இன்னிங்ஸ்களில் எட்டினார். இதன் மூலம், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கிரெயெம் பொல்லாக் நிலைநாட்டிய உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இந்த சாதனையை மோகதே, 2025-26 விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் நிகழ்த்தினார். கர்நாடகாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த அந்த போட்டியில், அவர் 122 பந்துகளில் 138 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், விதர்பா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற முக்கிய பங்காற்றினார்.

தேவ்தத் படிக்கல் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் தலா 17 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் எடுத்திருந்த முந்தைய இந்திய சாதனையை மோகதே முறியடித்து, புதிய சாதனை படைத்தார். 24 வயதான மோகதே, 2022-23 சீசனில் அறிமுகமானாலும், நடப்பு சீசனில்தான் அனைத்து வடிவப் போட்டிகளிலும் கவனத்தை ஈர்க்கும் வீரராக மாறியுள்ளார்.
2025-26 ரஞ்சி டிராபியின் முதல் கட்டத்தில், மோகதே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 7 இன்னிங்ஸ்களில் 96.16 சராசரியுடன் 577 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சதங்களும் ஒரு அரை சதமும் அடங்கும். மேலும், அதே சீசனின் சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விதர்பாவின் அதிக ரன் குவித்த வீரராக மோகதே இருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் அமன் மோகதேவின் ஆட்டம் மிகச் சிறப்பானது. இத்தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 97.62 சராசரியுடன் 781 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்த வீரராகத் திகழ்கிறார். இதில் ஐந்து சதங்களும் ஒரு அரை சதமும் அடங்கும். ஒரே விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் அடித்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இத்தொடரை வங்காளத்திற்கு எதிராக 110 ரன்களுடன் தொடங்கிய மோகதே, பின்னர் ஹைதராபாத் (82), ஜம்மு காஷ்மீர் (139) அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் குவித்தார். சண்டிகருக்கு எதிராக சறுக்கியிருந்தாலும், பரோடா மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு எதிராக சதம் அடித்து மீண்டார். அரையிறுதி சதம், விதர்பாவை முதல் முறையாக விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications