விஜய் சங்கர் செய்த செயல்.. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை.. ஆனால் அடித்தது 0.. என்ன நடந்தது?
கொழும்பு: 2026 லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் தொடரில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது, ஒரு ரன் கூட அடிக்காமல் 6 பந்துகளையும் வீணடித்து அவுட்டான தமிழக வீரர் விஜய் சங்கர் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பல்லேகலேயில் நேற்று (ஜூலை 30) நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கிப் போராடிய கண்டி ராயல்ஸ் அணி 19 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் கண்டி அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அவர் அந்த ஓவருக்கு முன் வரை 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்தார். யாழ்ப்பாணம் அணி சார்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கா கடைசி ஓவரை வீசினார். விஜய் சங்கர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆட்டத்தை வென்று தருவார் என்று கண்டி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், மதுஷங்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய விஜய் சங்கர், அடுத்தடுத்து 5 பந்துகளையும் ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்தார். இதனால் கண்டி அணியின் தோல்வி 3-வது பந்திலேயே உறுதியானது. கடைசிப் பந்திலாவது சிக்சர் அடிப்பார் என்று பார்த்தால், மதுஷங்கா வீசிய ஷார்ட் பந்தை தூக்கி அடிக்க முயன்று, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் நின்ற தவ்ஹித் ஹிரிடோயிடம் கேட்ச் கொடுத்து விஜய் சங்கர் டக்-அவுட் ஆனார்.
இதன் மூலம் இறுதி ஓவரை விக்கெட்-மெய்டனாக, அதாவது ரன் ஏதும் தராமல் விக்கெட் எடுத்து யாழ்ப்பாணம் அணிக்கு 21 ரன்கள் வித்தியாசத்தில் மதுஷங்கா வெற்றியைத் தேடித்தந்தார். டி20 கிரிக்கெட்டில் 20-வது ஓவரை விக்கெட்-மெய்டனாக வீசிய அரிதான பந்துவீச்சாளர்களின் பட்டியலில் மதுஷங்கா இணைந்துள்ளார்.
இதற்கு முன் ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி மற்றும் முகமது அமீர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். ஆனால், சர்வதேச அனுபவம் வாய்ந்த விஜய் சங்கர் போன்ற ஒரு வீரர், கடைசி ஓவரில் ஒரு ரன் கூட அடிக்காமல் 6 பந்துகளையும் வீணடித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
