Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வினேஷ் போகத் போட்டியில் வீசப்பட்ட பாட்டில்.. நடுவர்கள், சஞ்சய் சிங்குடன் கடும் மோதல்..அழுத நிஷு

டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மல்யுத்த தகுதிச் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் தரப்பினருக்கும், இந்திய மல்யுத்த சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. நடுவர்களின் தீர்ப்பு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தகுதிச் சுற்று ஆட்டம் போர்க்களமாக மாறியது.

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கில் இன்று 53 கிலோ எடைப்பிரிவுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் காலிறுதிப் போட்டியில் ஹரியானாவின் நிஷுவை எதிர்த்து வினேஷ் போகத் களம் கண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் நிஷு ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

Vinesh Phogat and Sanjay Singh Clash Amid Chaos and Bottle Throwing in Asian Games Wrestling Trials

தண்ணீர் பாட்டில் வீச்சு

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வினேஷ் போகத், எதிராளியின் தோள்களைத் தரையில் அழுத்தி (பின்ஃபால் - Pinfall) வெற்றியை உறுதி செய்ய முயன்றார். ஆனால், நடுவர் பாதியிலேயே ஆட்டத்தை நிறுத்தி, வினேஷுக்கு 4 புள்ளிகளை மட்டுமே வழங்கினார். இதனால் வினேஷ் தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். வினேஷின் கணவர் சோம்வீர் ராத்தி ஆவேசமடைந்து, தனது எதிர்ப்பைக் காட்ட மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டிலை வீசினார். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் நடுவரின் முடிவை வினேஷ் எதிர்த்தார் (சேலஞ்ச்). அந்தச் சவாலில் வினேஷுக்கு வெற்றி கிடைத்தது.

உடைந்த தொலைக்காட்சித் திரை

சிறிது நேரத்தில் வினேஷ் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தி நிஷுவை வீழ்த்தினார். இதற்கு நடுவர் 2 புள்ளிகளை வழங்கினார். ஆனால், வினேஷ் தரப்பு 4 புள்ளிகள் கோரி மீண்டும் சவால் விடுத்தது. இந்த முறை வினேஷின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த வினேஷ் மற்றும் அவரது பயிற்சியாளர்கள், நடுவர்கள் பார்த்த வீடியோ ஆதாரத்தைக் காட்டும்படி நடுவர் மேசையருகே சென்று வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, வீடியோவை மறுஆய்வு செய்யும் தொலைக்காட்சித் திரை திடீரென வேலை செய்யாமல் போனது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோவைக் காட்ட முடியாது என அதிகாரிகள் கூறியதால் ஆத்திரம் அடைந்த வினேஷ் தரப்பினர் கூச்சலிட்டனர்.

சஞ்சய் சிங்குடன் வாக்குவாதம்

இந்தச் சூழலில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் சஞ்சய் சிங் மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் வினேஷ் போகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் மைதானமே பதற்றமடைந்தது. சுமார் அரை மணி நேரம் தகுதிச் சுற்று ஆட்டங்கள் முற்றிலும் முடங்கின.

கண்ணீருடன் வெளியேறிய நிஷு

இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. கடைசி வினாடிகளில் அதிரடி காட்டிய வினேஷ் போகத் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் நிஷுவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வியடைந்த இளம் வீராங்கனை நிஷு, நடுவர்களின் தீர்ப்பு தனக்கு எதிராக இருந்ததாகக் கூறி மைதானத்திலேயே அழுதார். அவர் நடுவருக்குக் கைகொடுக்க மறுத்துவிட்டு வெளியேறினார். வினேஷ் போகத் அவரைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்வாகும் முனைப்பில் வீராங்கனைகள் போராடிக்கொண்டிருக்க, நிர்வாகச் சீர்கேடும் அதிகாரிகளின் மோதலும் தகுதிச் சுற்றின் மாண்பைக் குறைப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வினேஷ் போகத் அரையிறுதிக்குத் தகுதி பெற்றாலும், சம்மேளனத் தலைவருடனான இந்த நேரடி மோதல் மல்யுத்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த தகுதிச் சுற்றுக்கு வினேஷ் போகத் நீதிமன்றத்தின் உதவியை நாடித் தான் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 30, 2026, 17:02 [IST]
Other articles published on May 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+