தானே : பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் சகோதரர் போல் இருந்த வினோத் காம்ப்ளி ஒழுக்கமின்மை, கிரிக்கெட் மீதான நாட்டம் இல்லாத காரணங்களால் சரிவை சந்தித்தார். போதை மது என சுற்றி திரிந்த வினோத் காம்பிளியின் உடல்நலம் மிகவும் மோசமாக ஆனது.

கடந்த சில மாதம் முன்பு சாலையில் நடக்க முடியாத நிலையில் ரசிகர்கள் உதவி உடன் வினோத் காம்ப்ளி ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த வீடியோ வைரல் ஆனது. அதன் பிறகு தனது கிரிக்கெட் பயிற்சியாளர் நூறாவது பிறந்தநாள் விழாவில் சச்சின் டெண்டுல்கருடன் வினோத் காம்ப்ளி பங்கேற்று இருந்தார். அப்போதும் வினோத் காம்ப்ளியின் உடல் நலம் மிகவும் மோசமாக இருந்தது.
வினோத் காம்ப்ளிக்கு பலரும் உதவி செய்ய முன் வந்தனர். இந்த சூழலில் வினோத் காம்ப்ளிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் வினோத் காம்ப்ளிக்கு மூளையில் லேசான ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் சிறுநீர் தொற்று உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் வினோத் காம்ப்ளி உடல் நலம் நல்ல முறையில் முன்னேறி வருவதாக தெரிகிறது. மருத்துவமனையில் உள்ளவாறு பெண் ஒருவருடன் வினோத் காம்ப்ளி உடல் நலம் தேறி நோயாளி உடை அணிந்தவாறு துள்ளல் நடனம் போட்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் வினோத் காம்ப்ளி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எனினும் சிறுநீர் கழிப்பதற்கான பை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அவர் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. எனினும் இந்த வீடியோ மூலம் வினோத் காம்ப்ளி தற்போது பழைய நிலைக்கு திரும்பி வருவது தெளிவாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வினோத் காம்ப்ளி போதை பழக்கத்திலிருந்து மீண்டு வந்தால் அவருக்கு உதவி செய்ய தயார் என்று கபில்தேவ் உள்ளிட்டோர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.