கம்பீருடன் விராட் கோலிக்கு மோதல் வரும் என்று எனக்கு முன்பே தெரியும்.. நடுவர் சொன்ன பரபரப்பு கருத்து
மும்பை: விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் களத்தில் நடந்து கொள்ளும் விதம் , கிரிக்கெட்டை விறுவிறுப்பாக வைத்து கொள்ளும் என்று முன்னாள் சர்வதேச நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு தனது சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த வகையான ஆக்ரோஷம் மிகவும் அவசியமான ஒன்று என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "உண்மையில், எனக்கு கோலியுடன் ஒரு கூடுதல் நெருக்கம் உண்டு, ஏனெனில் நான் அவரது சிறுவயது முதலே அவரது போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன். அவரிடம் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. சில நேரங்களில் அவர் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றுவார், ஆனால் நாம் சரியான தீர்ப்பு வழங்கியிருந்தால், அவர் அதை கைவிரித்து பாராட்டுவார்.

ஓவர்களுக்கு இடையே அருகில் வந்து தோளில் கைபோடுவார். அவர் மைதானத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அவரைப் போன்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருக்க வேண்டும்; இல்லையெனில் ஆட்டம் சுவாரசியமற்றுப் போய்விடும்" என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீருடன் 2013-ல் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட கோலியின் ஆக்ரோஷமான தருணங்கள் குறித்துப் பேசிய அனில் சவுத்ரி, "அப்படி நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும், ஏனெனில் வட மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் மிகுந்த ஆக்ரோஷத்துடன் விளையாடுவார்கள். நானும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன்."
"நமது வீரர்கள் எப்போதும் இப்படித்தான் விளையாடுவார்கள். இந்த ஆக்ரோஷம் இல்லையெனில், அவர்களின் சிறந்த ஆட்டம் வெளிப்படாது. வீரர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகளை விதித்தால் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவை குறைந்துவிடும். ஆனால், அதற்கென்று ஒரு எல்லை உள்ளது, அதைத் தாண்டக் கூடாது," என்று அவர் கூறினார்.
மேலும், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் பேட்டர்கள் அவுட் செய்யப்படுவது (மன்கடிங்) குறித்த விவாதங்கள் குறித்தும் அனில் சவுத்ரி தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். "இந்த ஆட்டமிழப்பு முறை கிரிக்கெட்டில் முற்றிலும் நியாயமானதுதான். நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும் பேட்டர் பந்து வீசுவதற்கு முன்பே அதிக தூரம் முன்னோக்கிச் செல்வதால், அவர் அடுத்த முனையை அடைய மிகக் குறைந்த தூரமே ஓட வேண்டியிருக்கிறது, இது நியாயமற்றது" என்று அவர் கூறினார்.
"இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில், இதற்கு தகுந்த எச்சரிக்கை முறையுடன் கூடிய புதிய விதிமுறை கொண்டு வரப்படும் என்று நான் நினைக்கிறேன். ஒரு முறை அல்லது இரு முறை எச்சரித்த பிறகு, ரன்கள் அபராதமாக விதிக்கப்படலாம். ஏனெனில், பந்துவீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பே பேட்டர் ஓடத் தொடங்கிவிட்டால், பந்துவீச்சாளருக்கு என்ன தான் வாய்ப்பு இருக்கும்?" என்றும் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications

