ஐபிஎல் கோப்பையை வென்ற உடன் ஆசிரமத்திற்கு சென்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மா
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவரலாற்றுச் சாதனை படைத்தது. குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெற்றிக்குப் பிறகு, நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் மகாராஜை சந்தித்து ஆசி பெற்றனர்.
ஆன்மிக குருக்களைச் சந்திப்பது இந்த ஜோடியின் வழக்கம். பிரேமானந்த் மகாராஜின் ராதா குஞ்ச் ஆசிரமத்திற்கு காரில் இருந்து இறங்கி வெறுங்காலுடன் சென்றனர். முகக்கவசம் அணிந்திருந்த விராட் கோலி டீ-சர்ட், பேன்ட்டிலும், அனுஷ்கா ஷர்மா குர்தி, பிங்க் துப்பட்டாவிலும் காணப்பட்டனர். ஆசி பெற்ற பின் இருவரும் திரும்பினர்.

ஆர்சிபி வெற்றிக்கு விராட் கோலி முக்கியப் பங்காற்றினார். இறுதிப் போட்டியில் 156 ரன்கள் இலக்கை துரத்திய கோலி, தனது "சேஸ் மாஸ்டர்" பட்டத்தை மீண்டும் நிரூபித்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் அடித்து, அர்ஷத் கான் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், ஆர்சிபி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகளைத் தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அணியாக தொடர்ந்து இரண்டு முறை பட்டம் வென்றது. இந்த ஐபிஎல் 2026 தொடரிலும், கடந்த சீசனைப் போலவே, கோலி ஆர்சிபி-யின் அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழ்ந்தார்.
16 ஆட்டங்களில் (56.25 சராசரி, 165.84 ஸ்ட்ரைக் ரேட்) 675 ரன்கள் (1 சதம், 5 அரைசதம்) கோலி குவித்தார். தொடர் முழுவதும் சிறப்பான நிலைத்தன்மையைக் காட்டி, நான்காவது சீசனாக 600 ரன்களுக்கு மேல் எடுத்தார். ஐபிஎல்-லில் இதுவரை 9 சதங்கள், 68 அரைசதங்களுடன் ஒட்டுமொத்தமாக 9336 ரன்கள் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
