மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 13 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி போட்டிக்கு திரும்பி வெறும் 6 ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, டெல்லி அணி சார்பாக களமிறங்கினார்.
இந்த போட்டியை காண்பதற்காக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆயிரம் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் இந்த போட்டியை நேரலையில் கிரிக்கெட் வர்ணனையில் முன்னாள் வீரர் ரஜத் பாட்டியா செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் முக்கியமான சம்பவமாக கருதப்படும் கம்பீர் விராட் கோலி களத்தில் மோதிக்கொண்டது குறித்து அவர் பேசினார். முன்னாள் டெல்லி வீரரான ரஜத் பாட்டியா, 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து ருசிகரமாக கூறியிருக்கிறார்.
"விராட் கோலி, கம்பீர ஆகியோர் களத்தில் மோதிக்கொண்ட போது அதை நான் தான் தடுத்தேன். அதனை பார்த்து தான் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். நான் களத்தில் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும், அதைவிட இந்த மோதலை தடுத்து நிறுத்தியவன் என்பதை தான் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள்".
"களத்தில் மோதி கொண்ட இருவரும் தற்போது வரலாற்றில் மிகப்பெரிய இடம் கிடைத்திருக்கிறது. ஒருவருக்கு இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்தின் பெயரும்,இன்னும் ஒருவருக்கு அவரது பெயரில் பெவிலியனும் இருக்கிறது".
"அனைத்து அணியில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியிலும் சிறுசிறு சண்டைகள் இருக்கும். டெல்லி ரஞ்சி அணியில் கூட நிறைய சண்டைகள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அந்த சண்டையை நாங்கள் அப்படியே மறந்து விடுவோம், தொடர மாட்டோம். தற்போது கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் விராட் கோலி அணியின் முக்கிய வீரராகவும் இருக்கிறார்" என்று நேரலையில் ரஜத் பாட்டியா கூறினார்.