உபி: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவர் மனைவி குடும்பத்தினருடன் ஆசிரமத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். உத்திரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் என்ற இடத்தில் ஸ்ரீ ஹித் ராதா கேழி குஞ்ச் ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் இருக்கும் பிரமானந்த கோவிந்த் சரஞ்சி மகாராஜ் என்ற சாமியாரை விராட் கோலி வழிபடுவது வழக்கம்.
நடப்பாண்டு ஜனவரி மாதம் தனது குடும்பத்தினருடன் இந்த ஆசிரமத்திற்கு சென்று பிரேம்நாத் ஜி மகாராஜை விராட் கோலி வணங்கி வந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது விராட் கோலி முதல் முறையாக ஆசிரமத்திற்கு வந்து வணங்கினார்.

அப்போது விராட் கோலியை பார்த்தவுடன் பிரேம்நாத் ஜி மகராஜ் சாமியார் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்வியை கேட்டவுடன் நெகிழ்ச்சி அடைந்த விராட் கோலி, இருக்கிறேன் மகாராஜ் ஜி என்று பதில் அளித்துள்ளார். அதற்கு மீண்டும் மகாராஜா சாமியார், நீ நன்றாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர்," நாம் தற்போது இருக்கும் நிலைக்கு நாம் செய்த காரியங்கள் தான் தவிர வேறு எதுவும் கிடையாது. நமது இந்தப் பயணம் தெய்வீகத்தை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் அனைத்திற்கும் மேலானது நமது உள்ளம் எவ்வாறு மாறி இருக்கிறது என்பது மட்டும்தான். நீ தற்போது எப்படி வாழ்கிறாயோ, அதேபோல் தொடர்ந்து வாழ்வாயாக!
உலகத்துடன் எப்போதுமே தொடர்பில் இரு. அதே சமயம் உன் உள்ளத்தையும் மாற்றிக் கொள். புகழுக்கும் பெருமைக்கும் என்றும் ஆசைப்பட வேண்டாம். உனது உள்ளம் எப்போதுமே, எனக்கு இந்த உலக விஷயங்கள் எதுவும் வேண்டாம். எனக்கு நீ மட்டும் போதும் இறைவா என்ற நினைப்பில் இருக்க வேண்டும் என்று மகாராஜ் சாமியார் உரையாற்றினார்.
இதை கேட்டவுடன் கோலியும் அனுஷ்காவும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அப்போது அனுஷ்கா சர்மா, இறைவனின் பெயரை தினமும் கூறினால் நம் வாழ்க்கையின் பயனை எட்டி விடலாமா என்று கேட்டார் அதற்கு சாமியார் ஆம் என்று பதில் அளித்தார். கடவுள் நம்பிக்கை மற்றும் பக்திப் பயணத்தில் இருக்கும் விராட் கோலி தற்போது பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.