பந்து போட்டுட்டு பவுண்டரி லைன் வரைக்குமா ஓடுறது.. சிராஜ் செய்த சேட்டை.. விராட் கோலி ரியாக்சன பாருங்க
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ் செய்த சேட்டையான சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பினர். அதேபோல் அக்சர் படேல் காயம் காரணமாக திரும்பியதால், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

இந்த நிலையில் இலங்கை அணி தரப்பில் நிஷாங்கா - குசல் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் குசல் பெரேரா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் 2வது ஓவரை வீசிய சிராஜ், மெய்டன் செய்து அசத்தினார். தொடர்ந்து 3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடியது.
இதையடுத்து சிராஜ் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் நிஷாங்கா 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 3வது பந்தில் சமரவிக்ரமா டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் 4வது பந்தில் அசலங்காவும் டக் அவுட்டாக, சிராஜ் ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கேற்ப முகமது சிராஜ் பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட் வகையிலான ஃபீல்ட் செட் அப் அமைக்கப்பட்டது.
ஆனால் களம் புகுந்த தனஞ்செயா டி சில்வா அந்த பந்தில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரியை அடித்தார். அந்த பவுண்டரியை தடுப்பதற்காக ஃபீல்டர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முகமது சிராஜ் வேகமாக ஓடி சென்றார். பந்துவீசி விட்டு உடனடியாக பவுண்டரியை தடுக்க சிராஜ் சிரித்துக் கொண்டே ஓடினார். இதனை பார்த்த விராட் கோலி, ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே இருந்தனர்.
இதன் பின்னர் கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வாவை 4 ரன்களில் வீழ்த்தி சிராஜ் அசத்தினார். இதன் காரணமாக சிராஜ் வீசிய ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து 6வது ஓவரில் இலங்கை அணியின் கேப்டன் ஷனகாவை போல்ட்டாக்கி வெளியேற்ற, பின்னர் குசல் மெண்டிஸையும் 17 ரன்களில் வீழ்த்தி அசத்தினார் சிராஜ். இதன் மூலம் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications