விராட் கோலி ஆணவமும் திமிரும் கொண்டவர்.. ஏபி டிவில்லியர்ஸ் பரபரப்பு கருத்து
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியை முதன்முறையாகச் சந்தித்தபோது, அவர் ஆணவமும் திமிரும் கொண்டவர் என்று தாம் நினைத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காலப்போக்கில் இந்த எண்ணம் முற்றிலும் மாறி, இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியதாக அவர் கூறியுள்ளார். பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி குறித்த தனது ஆரம்பகாலக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

"தொடக்கத்தில் கோலியைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு அப்படிப்பட்ட ஒரு பிம்பம் இருந்தது உண்மைதான். இதை அவரும் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன். தனது 19, 20 மற்றும் 21 வயதில் அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட இளைஞராக இருந்தார்" என்று டி வில்லியர்ஸ் கூறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த காலத்தில் கோலியின் இயல்பான தன்னம்பிக்கையைத் தான் தவறாகப் புரிந்துகொண்டதாக அவர் விளக்கினார். கோலி சிறுவயது முதலே ஆக்ரோஷமான மற்றும் வலுவான தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடி வந்ததாகவும், அதுவே வெளிப்படைத்தன்மையால் மற்றவர்களால் ஆணவமாகக் கருதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வயது முதிர்ச்சியுடனும் அனுபவத்துடனும் விராட் கோலி ஒரு சிறந்த மனிதராகவும் கிரிக்கெட் வீரராகவும் பெருமளவில் மாறியதாக டி வில்லியர்ஸ் சுட்டிக்காட்டினார். "இளமைப் பருவத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் மேலும் முதிர்ச்சியும் சமநிலையும் கொண்டவராக மாறினார்.
அதனால் மற்றவர்களிடம் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது" என்று டி வில்லியர்ஸ் தெரிவித்தார். ஆர்சிபி அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்து கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். ஆர்சிபி முதல் முறையாக கோப்பையை வென்ற போது டிவில்லியர்சும் அதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


