கோஹ்லி காட்டில் மழை.. டெஸ்ட் கப் வென்ற கையோடு டி20 ரேங்கில் முதலிடம் பிடித்தார்!
துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்சை பின்னுக்கு தள்ளி விராட் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
விராட் கோஹ்லிக்கு நேற்று அதிருஷ்டதினம் என்றுதான் சொல்ல வேண்டும். 22 வருடங்களுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக வழிநடத்திய மகிழ்ச்சியில் திளைத்திருந்த கோஹ்லிக்கு, இரவே மற்றொரு நல்ல செய்தி காதுக்கு எட்டியது. டி20 ரேங்கிங்கில் விராட் முதலிடம் பிடித்துவிட்டார் என்பதுதான் அந்த செய்தி.

பின்ச் பின்னுக்கு போனார்
ஐசிசி தரவரிசை பட்டியலில் கோஹ்லி 861 புள்ளிகளுடன், சர்வதேச டி20யின் நம்பர்-1 பேட்ஸ்மேனாகியுள்ளார். முதலிடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 857 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கெய்ல், டுபிளெசிஸ்
3வது இடத்தை 841 புள்ளிகளுடன், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் பாப் டு பிளசிஸ், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் முறையே, 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர்.

ரெய்னாவும்
இந்தியாவின் சுரேஷ் ரெய்னா இப்பட்டியலில் 11வது இடம் பிடித்துள்ளார். கோஹ்லிக்கு அடுத்ததாக இந்தியாவை சேர்ந்த பேட்ஸ்மேன் ஒருவரின் தற்போதைய அதிகபட்ச ரேங்க் இவருடையதுதான். இந்திய டி20 அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி, 33வது இடத்திலுள்ளார்.

அஸ்வினுக்கு 4வது இடம்
பந்து வீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரீ முதலிடத்திலுள்ளார். இந்தியாவின் அஸ்வின் 4வது இடம்வகிக்கிறார். அஸ்வினுக்கு அடுத்த பெஸ்ட் பவுலர் என்றால் 30வது இடத்திலுள்ள ரவீந்திர ஜடேஜாதானாம்.

ஆஸ்திரேலியா பின்னுக்கு போனது
அணிகளை பொறுத்தளவில், நடப்பு டி20 உலக கோப்பை சாம்பியன் இலங்கை முதலிடத்தில் தொடருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தான் 2வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 8வது இடத்திலுள்ளது.


Click it and Unblock the Notifications