அசாருதீனின் 28 ஆண்டு கால சாதனை காலி.. முதல் போட்டியிலேயே புதிய வரலாறு படைத்த விராட் கோலி
திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் 28 ஆண்டு கால சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற மாபெரும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கோலி விளையாடும் 44-வது ஒருநாள் போட்டியாகும். இதற்கு முன் முகமது அசாருதீன் 1985 முதல் 1998 வரை 43 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக நீடித்தது.

இந்தப் பட்டியலில் கபில் தேவ் 42 போட்டிகளுடன் 3-வது இடத்திலும், ராகுல் டிராவிட் 40 போட்டிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் தலா 39 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக முறை களமிறங்கிய ஒட்டுமொத்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பால் 46 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடினால், சந்தர்பாலின் இந்த உலக சாதனையை சமன் செய்துவிடுவார்.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஏற்கனவே 9 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, இந்தப் போட்டியில் சதம் அடித்தால் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 10 ஒருநாள் சதங்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற தனிப்பெரும் சாதனையைப் படைப்பார். அத்துடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 15,000 ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 59 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் நமன் திர் அறிமுகம் ஆனார்.


Click it and Unblock the Notifications


