பெங்களூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். உலக அளவில் பாபர் அசாமின் முக்கிய சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் சின்னசாமி மைதானத்தில் மட்டும் இரண்டு முக்கிய சாதனைகளைச் செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு விராட் கோலி அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 42 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 392 ரன்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரை சதத்தின் மூலம், பாபர் அசாமின் முக்கிய சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். டி20 போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் 61 அரை சதங்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அதை தற்போது விராட் கோலி 62 அரை சதங்களுடன் முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், உலக அளவில் டி20 போட்டிகளில் 50 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கோர்களை அதிகமாக அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலக அளவில் டி20 போட்டிகளில் 50 ரன்கள் அல்லது அதற்கும் அதிகமான ஸ்கோர்களை அதிகமாக அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 117 முறை 50 ரன்கள் அல்லது அதற்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்துள்ளார். விராட் கோலி 111 முறை அதை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 110 முறை இதை செய்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
மேலும், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டுமே விராட் கோலி 26 முறை அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் ஒரே மைதானத்தில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முதல் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் நாட்டிங்க்ஹாம் மைதானத்தில் 25 முறை அரை சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இது மட்டுமின்றி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டுமே விராட் கோலி 3500-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த வீரரும் ஒரே மைதானத்தில் 3500 ரன்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.