நான் எந்த தப்பும் பண்ணலை.. பாலிவுட் நடிகை படத்துக்கு லைக்.. உண்மையை உடைத்த விராட் கோலி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை அவ்னீத் கவுரின் புகைப்படங்களை லைக் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். எனினும், ரசிகர்கள் பலரும் விராட் கோலி 'கையும் களவுமாக' பிடிபட்டு விட்டதாக வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் இந்திய அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர் விராட் கோலி. சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அவர் பல்வேறு விளம்பரப் பதிவுகளையும் நீக்கியிருந்தார். சமீபகாலமாக தனது சொந்த விவகாரங்களைப் பற்றிய பதிவுகளை மட்டுமே அவர் வெளியிடுவார் எனக் கூறப்பட்டு வந்தது. மே 1ஆம் தேதி தன் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதற்கு மறுநாள், அவர் பாலிவுட் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு வரிசையாக லைக் செய்திருந்தார். அதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக பாலிவுட் நடிகை ஒருவரின் புகைப்படங்களுக்கு விராட் கோலி இத்தனை லைக்குகளை அளித்துள்ளார் என அவர்கள் விவாதித்து வந்தனர். சிலரோ, விராட் கோலி 'கையும் களவுமாக' சிக்கிவிட்டார் என்றும், அந்த நடிகையுடன் அவர் தொடர்பில் இருக்கிறார் என்றும் வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் விராட் கோலி இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். "இன்ஸ்டாகிராமில் எனக்கு காட்டப்பட்ட பதிவுகளை நீக்கிக்கொண்டிருந்தபோது, அல்காரிதம் தவறுதலாக சில 'லைக்'களைப் பதிவு செய்திருக்கலாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையில்லாத அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் புரிதலுக்கு நன்றி'" என்று கூறியிருக்கிறார் விராட் கோலி.
இன்ஸ்டாகிராம் செயலியில் தனக்குக் காட்டப்படும் பதிவுகளை நீக்கிக்கொண்டிருந்தபோது, தனது கை தவறுதலாக லைக் செய்திருக்கலாம் என விராட் கோலி விளக்கம் அளித்திருக்கிறார். இதை அடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எனினும், சிலர் இதை பெரிய தவறாக புனைந்து அவரது விளக்கத்தையும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications