2 கோடி ரூபாய் பாக்கி.. அந்த ஹோட்டலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கிய விராட் கோலி
பெங்களூர்: பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகே கிரிக்கெட் ரசிகர்களால் 'விராட் கோலி உணவகம்' என்று அன்போடு அழைக்கப்பட்ட 'ஒன்8 கம்யூன்' உணவகம் தற்போது நீதிமன்ற உத்தரவால் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பாக்கி மற்றும் அடுத்தடுத்த புகார்களால் சிக்கிய இந்த உணவகத்திற்கும், தனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதில் இருந்த தனது பங்குகளை அவர் விற்று விட்டதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கூடும் இந்த உணவகத்திற்கு என்ன ஆனது? ஏன் இந்த திடீர் முடிவு? விரிவாகப் பார்ப்போம்.
ட்ரையோ ஹில்ஸ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த உணவகம், கடந்த 6 மாதங்களாக கட்டிட வாடகையைச் சரியாகச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடகை மட்டுமின்றி, பராமரிப்பு கட்டணம் மற்றும் வருவாய் பகிர்வு என அனைத்தும் சேர்த்து சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. நிலுவைத் தொகை மிக அதிகமாக இருந்ததால், கட்டிட உரிமையாளர் சிவில் நீதிமன்றத்தை நாடினார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து பாக்கிகளையும் செலுத்தும் வரை உணவகத்தை மூட உத்தரவிட்டது.

பண விவகாரம் மட்டுமின்றி, பாதுகாப்பு விதிமீறல்களும் இந்த உணவகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. தீயணைப்புத் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாதது, முறையான புகைப்பிடிக்கும் இடம் ஒதுக்காதது எனப் பல புகார்கள் அடுக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு வரை உணவகத்தை இயக்கியதற்காகப் பெங்களூரு மாநகராட்சி மற்றும் போலீசார் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இத்தகைய தொடர் விதிமீறல்களால் உணவகத்தின் நற்பெயர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தத் தொடர் சர்ச்சைகளால் அதிருப்தி அடைந்த விராட் கோலி, தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதால் இந்தத் தொழிலில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டுள்ளார். இந்த உணவகத்தில் தனக்கு இருந்த உரிமையைத் துறந்ததோடு, தனது பிராண்ட் பெயரான 'ஒன்8' என்பதை இனி பயன்படுத்தக் கூடாது என்றும் உரிமையாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விராட் கோலி தனது பெயரைத் திரும்பப் பெற்ற பிறகு, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து, பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது.
2023 டிசம்பர் மாதம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த உணவகம், இரண்டே ஆண்டுகளில் இத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத் தடையால் உணவகத்தின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து விராட் கோலி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் நட்சத்திர உணவகமாகத் திகழ்ந்த இந்த இடம், இன்று சர்ச்சைகளின் மையமாக மாறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications