
ஐசிசி விருதுகள்
2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்தது. சில வாரங்கள் முன்பு இதற்கான ஓட்டெடுப்பு வேலைகளை துவங்கியது ஐசிசி. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி
எல்லோரும் எதிர்பார்த்தது போல விராட் கோலி இரண்டு முக்கிய விருதுகளை வென்றார். பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வென்றார். தோனியை வீழ்த்தி ஒருநாள் பிரிவில் அவர் வென்றுள்ளார்.

தோனி
தோனிக்கு வேறு ஒரு பிரிவில் விருது அளித்து கௌரவம் அளித்துள்ளது ஐசிசி. களத்தில் விளையாட்டு தர்மத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது அளிக்கப்பட்டது. 2011இல் இங்கிலாந்து வீரர் இயான் பெல் தவறான தீர்ப்பால் வெளியேறிய போது அவரை அழைத்து ஆட வைத்தார் தோனி. அதற்காகவே அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்றார். அவர் இடையே ஓராண்டு தடையை அனுபவித்த போதும் சிறந்த வீரருக்கான விருதை அவர் வென்றார். விராட் கோலி, அஸ்வின் ஆகிய இந்திய வீரர்களை வீழ்த்தி அவர் இந்த விருதை வென்றுள்ளார்.

ரஷித் கான்
சிறந்த டி20 வீரருக்கான விருதை ரோஹித் சர்மா வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அந்த விருதை வென்றார். அவர் டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.

எலிஸ் பெர்ரி
மகளிர் பிரிவில் சிறந்த ஒருநாள் அணி வீராங்கனை, சிறந்த டி20 வீராங்கனை, மற்றும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என மூன்று விருதுகளையும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எலிஸ் பெர்ரி அள்ளினார். அவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஆவார்.


Click it and Unblock the Notifications












