இப்பதான் பாரமே குறைந்தது.. நிதின் மேனனை ஒரே வார்த்தையால் வறுத்தெடுத்த விராட் கோலி.. ரசிகர்கள் குஷி!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் அம்பயர் நிதின் மேனனை வைத்து விராட் கோலி தரமான செய்கை செய்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இப்போது தான் மனதில் இருந்த பாரமே குறைந்தது என கூறி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்தது. இதனை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை விட ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது விராட் கோலி தான். 3 வருடங்களாக டெஸ்ட் சதம் அடிக்காமல் இருந்து வந்த சூழலில் அதற்கு முடிவு கட்டினார்.

கோலி - நிதின் பிரச்சினை
இந்நிலையில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதை போல கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் விராட் கோலி. ஒவ்வொரு தொடரிலும் விராட் கோலி - நிதின் மேனன் இடையே ஏதாவது சர்ச்சை உருவாகிக்கொண்டே தான் இருக்கும். கோலி என்ன செய்தாலும், அதற்கு எதிராக தான் மேனனின் முடிவு இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் கூட கோலியின் பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் பந்து பட்டது. ஆனால் பேட்டில் தான் முதலில் பட்டது எனக்கூறி அவுட் கொடுத்தார். இதனால் கோலியின் ரசிகர்கள் நிதின் மேனனுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

சுவாரஸ்ய சம்பவம்
ஆனால் கடைசி டெஸ்டில் விராட் கோலியே இதுகுறித்து வாய்த்திறந்துள்ளார். ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸின் போது டிராவிஸ் ஹெட் எல்.பி.டபள்யூ அவுட்டாகியிருப்பார். நன்கு செட்டிலாக அரைசதத்திற்கு அருகே அவர் நெருங்கியிருந்ததால், விக்கெட் வேண்டும் என ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். எனினும் அம்பயர் நிதின் மேனன் நாட் அவுட் எனக்கூறினார்.

கிண்டலடித்த கோலி
இதனை பார்த்த விராட் கோலி, இதுவே அந்த பேட்ஸ்மேனாக நான் இருந்திருந்தால், நிச்சயம் எல்.பி.டபள்யூ என அவுட் கொடுத்திருப்பீர்களே என கிண்டலாக கேட்டார். இதனால் களத்தில் சிரிப்பலை எழுந்தது. அம்பயர் நிதின் மேனனும் கோலிக்கு பதிலளிக்கும் வகையில், ஆமாம் ஆமாம்.. எனக்கூறியதோடு மட்டுமின்றி அவுட் சிக்னலையும் காட்டினார்.

எச்சரிக்கை
ரசிகர்கள் விமர்சிப்பதை போன்றே தான் எப்போதுமே கோலிக்கு எதிரான முடிவுகளை நிதின் மேனன் தந்து வருகிறார். இதுகுறித்து கோலியும் எந்தவித புகாரையும் தெரிவித்தது கிடையாது. தற்போது வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்திருப்பதால், இனி அதுபோன்ற தவறுகள் நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதனை காணலாம்.


Click it and Unblock the Notifications