லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆடும் ஆட்டத்தில் பாதியளவு கூட இல்லை என்று இங்கிலாந்து ஜாம்பவான் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் விராட் கோலி, ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தனர். 4 வீரர்களும் அனைத்து நாடுகளிலும், அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் போட்டிப்போட்டிக் கொண்டு ரன்களை குவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதால், கிரிக்கெட் ரசிகர்கள் 4 பேரையும் ஒப்பிட்டு வந்தனர்.

ஃபேப் 4 என்று கொண்டாடப்பட்ட 4 பேருக்கும் இடையிலான போட்டியில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். கேப்டன்சி, பேட்டிங் என்று அனைத்து அணிகளையும் அசால்ட்டாக சம்பவம் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேட்டிங் வீழ்ச்சி, விராட் கோலிக்கு பெரியளவில் பாதிப்பை உண்டு பண்ணியது. ஜாலியாக சதம் விளாசி வந்த விராட் கோலியின் பேட்டிங்கில் இருந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சதமும் வரவில்லை. இதன் விளைவால், ஐசிசி டாப் 10 பட்டியலில் இருந்தும் விராட் கோலி வெளியேற்றப்பட்டார்.
இந்த சூழல் தான் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் சதங்களால் விளாசி தள்ளுகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஜோ ரூட் 2,500 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். இன்னொரு பக்கம் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே பீஸ்ட் மோடில் விளையாடுகிறார். சராசரி 60க்கு குறைந்தாலே, உடனடியாக ஒரு சதத்தை அதிரடி அடிக்கிறார். நேற்று 32வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மை இங்கிலாந்து ஜாம்பவான் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டிக்கு இடையில் நாசர் ஹுசைன் பேசுகையில், தற்போதைய சூழலில் ஃபேப் 4 என்ற பேச்சிற்கே இடமில்லை. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஃபார்மை இழந்துவிட்டார். நீண்ட காலமாக பேட்டிங் ஃபார்மை மீட்க முடியாமல் தவித்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் சேர்த்த ரன்களில் பாதியை கூட விராட் கோலியால் ரன்களை சேர்க்க முடியவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.