டெல்லி: விராட் கோலி ஆடுகிறார் என்பதால் 20,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதிய ரஞ்சி டிராபி போட்டியை பார்க்க நேரில் வந்திருந்தனர். அதனால், இந்த போட்டி நடைபெற்ற அருண் ஜெட்லி மைதானம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் கூட்டத்தை எதிர்கொண்டது.
ஆனால், கடந்த நான்கைந்து நாட்களாக கொடுக்கப்பட்ட "பில்டப்புகள்" எல்லாம் வெறும் 15 பந்துகளுக்கு தான். இந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காகவே அத்தனை ரசிகர்களும் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். விராட் கோலி அரை சதம் அல்லது சதம் அடித்து ஃபார்முக்கு திரும்புவார் என நம்பினர். ஆனால், எல்லாம் வீணாகப் போனது.

விராட் கோலி வெறும் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்த நிலையில் அவர் இந்த உள்ளூர் போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் ரன் குவித்து தனது ஃபார்மை அவர் மீட்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர்.
இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி தீவிர பயிற்சியை மேற்கொண்டார். முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் தனிப்பட்ட முறையில் அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆஃப் சைடு வரும் பந்துகளை எதிர்கொள்வதற்கு அவர் தீவிர பயிற்சியை செய்தார்.
அதன் பின் டெல்லி மாநில கிரிக்கெட் அணியினருடன் இணைந்து கோலி பயிற்சி செய்தார். சுமார் ஒரு வார காலமாக பயிற்சி செய்த நிலையில் விராட் கோலி இந்தப் போட்டியில் ஆட வந்தார். எப்படியும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்தப் போட்டி நேரலையும் செய்யப்பட்டது.
ஆனால், 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ரயில்வேஸ் அணியின் ஹிமான்ஷு சங்வான் வீசிய இன்ஸ்விங்கர் பந்தில் விராட் கோலி பவுல்ட் அவுட் ஆனார். இதை அடுத்து கோலியின் பேட்டிங்கை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கோலி ஆட்டமிழந்த அடுத்த வினாடியே மைதானத்தை விட்டு கிளம்பத் துவங்கினர். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.