மும்பை: சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி மற்றும் ஜெனிலியா டிசோசா நடித்த விளம்பரப் படம் ஒன்று மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் அப்போது ஒளிபரப்பப்பட்டபோது சர்ச்சை எழுந்து பின்னர் அரசால் தடை செய்யப்பட்டது. அது ஏன் இப்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டில் விராட் கோலி இந்திய கிரிக்கெட் உலகில் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக அறியப்பட்டார். இளம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. அதே சமயத்தில் தான் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் இளைஞர்களின் விருப்பமான நடிகையாக இருந்து வந்தார் ஜெனிலியா. தமிழில் அவர் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அப்போது விராட் கோலி, ஜெனிலியாவை விரும்பியதாக ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஃபாஸ்ட்ராக் (Fastrack) நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்தனர். அந்த விளம்பரத்தில் விராட் கோலி ஒரு விமானத்தின் விமானியாக இருப்பது போலவும், ஜெனிலியா ஏர் ஹோஸ்டஸாக இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அப்போது விராட் கோலி மட்டும் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஜெனிலியா உள்ளே சென்று அவரை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வதாகவும், அப்போது விராட் கோலி விமானத்தை ஆட்டோபைலட் மோடில் வைத்துவிட்டு ஜெனிலியாவுடன் காதல் செய்வது போலவும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.
விமானத்தை ஓட்டுவதை விட தனது சொந்த வேலை தான் முக்கியம் என்பது போல விராட் கோலி நடந்துகொள்வதாக அதில் காட்டப்பட்டிருந்தது. பின்னர் "எதற்காக இந்த உலகில் ஆட்டோபைலட் என்ற ஒரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்" என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு விமானி நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை கூட பெரிதாக எண்ணாமல் விமானத்தை விட்டுவிட்டு காதல் செய்வது போல சித்தரித்திருப்பதுடன், மற்ற விமானிகளையும் ஆட்டோ பைலட்டை பயன்படுத்தி விட்டு சொந்த வேலைகளை செய்ய யோசனை சொல்வது போல உள்ளது. இது அபாயகரமானது என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.
சமீபத்தில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 241 பயணிகள் மற்றும் விமானத்தின் ஊழியர்கள் இறந்தனர். இந்த நிலையில்தான் விராட் கோலியின் இந்த பழைய விளம்பரத்தைச் சுட்டிக்காட்டி ரெடிட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விவாதித்திருந்தனர். இந்த விளம்பரம் இப்போதும் யூடியூபில் இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி விராட் கோலி இதுபோல பொறுப்பற்ற முறையில் அப்போது இருந்ததாகவும், இதுபோன்ற மோசமான விளம்பரத்தில் நடித்ததாகவும் விமர்சித்து இருந்தனர்.