அதிக 'மதிப்புள்ள' டாப் 10 விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான்.. பட்டியலை வெளியிட்ட 'போர்ப்ஸ்'!
லண்டன்: அதிக விளம்பர மதிப்புள்ள விளையாட்டு வீரர்கள் தொடர்பாக 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியைவிட, விராட் கோஹ்லி முன்னிலை பெற்று அசத்தியுள்ளார்.
விராட் கோஹ்லியை விளம்பர நிறுவனங்கள் மொய்ப்பதற்கு காரணம், அவரின் ஆட்டத்திறன் மட்டும் கிடையாது. அவரது செம ஃபிட்னசும் ஒரு காரணம். இதனால் ஹெல்த் ட்ரிங்ஸ் விளம்பர நிறுவனங்களும், அழகு சாதன நிறுவனங்களும் கூட கோஹ்லியை துரத்துகின்றன.
கிரிக்கெட் துறையில், தற்போதைக்கு உலகின் மிக முக்கியமான ஒரு வீரரும் விராட் கோஹ்லிதான். வீரர்களின் சம்பளம், போனஸ் மற்றும் சொந்த முதலீடுகளை தவிர்த்துவிட்டு, மார்க்கெட் நிலவரத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சச்சினுக்கு பிறகு கோஹ்லி
போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அதிக வருவாய் பெறும் விளையாட்டு வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்தியாவை பொறுத்தளவில் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவார். ஆனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்தை கோஹ்லி பிடித்துள்ளார்.

ரோஜர் பெடரர்
விளையாட்டு வீரர்களுக்கான மார்க்கெட் மதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவரது மார்க்கெட் மதிப்பு 37.2 மில்லியன் டாலர்கள்.

கூடைப்பந்தாட்ட வீரர்
2வது இடத்தில் இருப்பவர் லீப்ரோன் ஜேம்ஸ். இவரது மதிப்பு 33.4 மில்லியன் டாலர்களாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப் பந்தாட்ட வீரர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே.

உசேன் போல்ட் கலக்கல்
சமீபத்தில் ஓய்வு பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட் 27 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ளவராக மூன்றாவது இடத்தையும், கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 21.5 மில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்திலும் உள்ளார்.

கோல்ப் விளையாட்டுக்கு மவுசு
அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர்களான பில் மிக்கெல்சன் 19.6 மில்லியன் டாலர் மதிப்புடனும், டைகர் உட்ஸ் 16.6 மில்லியன் டாலர் மதிப்புடனும் முறையே, ஐந்து மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளனர்.

கோஹ்லி அசத்தல்
இந்த பட்டியலில் 7வது இடம் பிடித்து அசத்தியுள்ளார் விராட் கோஹ்லி. இவரது மார்க்கெட் மதிப்பு 14.5 மில்லியன் டாலர்களாகும். கோல்ப் வீரர் ரோரி மெக்கில்ராய் மதிப்பு 13.6 மில்லியன் டாலர்களாகும். கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி மதிப்பு அதைவிட சற்று குறைவாக 13.5 மில்லியன் டாலர்களாக உள்ளது. அமெரிக்காவின் கூடைப் பந்தாட்ட வீரர் ஸ்டெப் கர்ரி மார்க்கெட் மதிப்பு அதைவிட சற்று குறைவாக 13.4 மில்லியன் டாலர்களாக உள்ளது. இதனால் அவர் 10வது இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications