“உனக்கும் வரும் தம்பி.. அப்போ தெரியும்” சூர்யகுமாரின் சுவாரஸ்ய கேள்வி.. விராட் கோலி தந்த நறுக் பதில்
கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கேட்ட கேள்விகளுக்கு விராட் கோலி கொடுத்த அனுபவமான பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
2023ம் ஆண்டின் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள், கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 70 ரன்களை குவித்தனர். பேட்டிங்கில் இவர்கள் என்றால், பவுலிங்கில் உம்ரான் மாலிக் நாயகனாக திகழ்ந்தார்.

கோலி சதம்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,214 நாட்களுக்கு பிறகு இந்திய மண்ணில் சதத்தை விளாசியுள்ளார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களை விளாசினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் 45வது சதமாகும். இன்னும் 5 சதங்கள் அடித்தால் சச்சினின் (49) நீண்ட நாள் சாதனையை தகர்க்கலாம்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி
2 ஆண்டுகளாக மோசமான ஃபார்மால் தவித்து வந்த கோலிக்கு, 2022ம் ஆண்டின் 2வது பகுதி கம்பேக்காக அமைந்தது. அங்கு தொடங்கிய அவர், 2023ம் ஆண்டிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து தொடர்ந்து வருகிறார். இவரின் கம்பேக்கை பார்த்து பல வீரர்களும் வியப்படைந்துள்ளனர். அவர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் கோலியிடம் சில கேள்விகளை கேட்டார்.

சூர்யகுமாரின் கேள்வி
நேரலையில் பேசிய சூர்யகுமார், 4 - 5 ஆண்டுகளாக உங்களின் பேட்டில் இருந்து ரன்கள் வந்துக்கொண்டே இருந்தன. ஆனால் இடையில் 2 ஆண்டுகள் மட்டும் அப்படியே சரிந்துவிட்டது. அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள், 2023ம் ஆண்டை வெற்றிகரமாக அமைக்க எப்படி முயன்றீர்கள் என சூர்யகுமார் யாதவ் கேள்வி எழுப்பினார். இதற்கு கோலியும் சுவாரஸ்ய பதிலை தந்துள்ளார்.

கோலியின் பதில்
அதில், சூர்யகுமார் நீங்களும் நிறைய போட்டிகளில் ஆட ஆட நான் சந்தித்த விஷயங்களை அனுபவிப்பீர்கள். ரசிகர்கள் உங்களை வித்தியாசமாக பார்க்க தொடங்குவார்கள். அதாவது சூர்யகுமார் விளையாட சென்றால் ஏதேனும் ஒன்றை செய்து அசத்துவார் என எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது தான் அழுத்தங்களும், வருத்தங்களும் ஏற்படும்.

குழிக்குள் விழாதீர்கள்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் விளையாடினேன். ஆனால் கிரிக்கெட்டின் தன்மை அனுமதிக்கவில்லை. எனவே தான் எனது ஆட்ட முறையை முற்றிலுமாக மாற்றினேன். நான் யார்? எனது நிஜமான ஆட்டம் என்பதை புரிந்துக்கொண்டு மீண்டும் அதே வழியில் சென்றேன். மோசமாக ஆடுகிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் கம்பேக் தர முடியும். நான் சரி என்ற எண்ணத்திலேயே இருந்தால் குழிக்குள்ளே மாட்டிக்கொள்வோம் என கோலி பதிலளித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் உத்வேகம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications