என்னங்க கங்குலி, ரோஹித்தை விட மோசமா இருக்கு? உலகக்கோப்பையில் கோலியின் ஆவரேஜ் இவ்ளோதானா?
மும்பை : விராட் கோலி இதுவரை மூன்று ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் ஆடி இருக்கிறார். ஆனால், அதில் அவரது செயல்பாடு மற்ற ஜாம்பவான் வீரர்களோடு ஒப்பிடும்போது சராசரியாகவே உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று. அதற்கு காரணம், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற அனுபவமும், உச்சகட்ட ஃபார்மும் இருக்கும் வீரர்கள்.
ஆனால், விராட் கோலி உலகக்கோப்பை என்றாலே கொஞ்சம் பதுங்குகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. அப்படி ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் -

சச்சின் டெண்டுல்கர் - 2278 ரன்கள்
விராட் கோலி - 1030 ரன்கள்
சவுரவ் கங்குலி - 1006 ரன்கள்
ரோஹித் சர்மா - 978 ரன்கள்
ராகுல் டிராவிட் - 860 ரன்கள்.
"ஏன்பா, அதான் விராட் கோலி அதிக ரன் எடுத்து இரண்டாவது இடத்தில் தானே இருக்கார்?" என சிலர் நினைக்கலாம். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அதன் பின்னர் தான் இந்த பட்டியலில் பேட்டிங் சராசரியை கவனித்தேன். அந்த ஐந்து வீரர்களும் எத்தனை போட்டிகளில் இந்த ரன்களை எடுத்துள்ளார்கள், அதன் சாராசரி என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
சச்சின் - 45 போட்டிகள் - 2278 ரன்கள் - சராசரி 56.95
கோலி - 26 போட்டிகள் - 1030 ரன்கள் - சராசரி 46.81
கங்குலி - 21 போட்டிகள் - 1006 ரன்கள் - சராசரி 55.88
ரோஹித் - 17 போட்டிகள் - 978 ரன்கள் - சராசரி 65.20
டிராவிட் - 22 போட்டிகள் - 860 ரன்கள். - சராசரி 61.42
இந்த பட்டியலை பார்த்தாலே விராட் கோலி தான் 46.81 என்ற அளவில் மற்ற நால்வரை விட குறைந்த சராசரி வைத்து இருப்பது தெரிய வரும்.
இந்த பட்டியலில் கங்குலி மற்றும் கோலி கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் ரன் குவித்து உள்ளனர். ஆனால், கங்குலி அதை 21 போட்டிகளிலும், கோலி 26 போட்டிகளிலும் சேர்த்துள்ளார். இதை வைத்தே கோலி பின்தங்கி இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
சச்சின், கங்குலி, டிராவிட், ரோஹித் என மற்ற ஜாம்பவான் வீரர்கள் அனைவருமே உலகக்கோப்பை என்றால் பொங்கி எழுந்து அணிக்காக ரன் குவித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 55 முதல் 65 ரன்கள் வரை சராசரி வைத்துள்ளார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், அந்த நால்வரும் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் வைத்து இருக்கும் சராசரியை விட உலகக்கோப்பையில் அதிக சராசரி வைத்து இருக்கிறார்கள்.
ஆனால், விராட் கோலி தன் ஒட்டு மொத்த ஒருநாள் போட்டி பேட்டிங் சராசரியை விட உலகக்கோப்பையில் குறைவான சராசரி வைத்துள்ளார். விராட் கோலியின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி சராசரி - 57.38. உலகக்கோப்பை பேட்டிங் சராசரி - 46.81.
ஆக மொத்தத்தில் உலகக்கோப்பை என்றால் விராட் கோலி தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை என்பது புரியவரும். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு அணியுடன் மோதுவது அவரது பேட்டிங் செயல் திட்டத்திற்கு ஒத்து வராத விஷயமாக இருக்கலாம்.
மற்ற இருதரப்பு ஒருநாள் தொடர்களில் ஒரே அணியுடன் தான் மூன்று முதல் ஐந்து போட்டிகளில் ஆட வேண்டி இருக்கும். அதற்கு தயாராவதற்கும், உலகக்கோப்பை போன்ற பல அணிகள் மோதும் போட்டிகளுக்கு தயார் ஆவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதுதான் விராட் கோலியின் பிரச்சனையா? என்பது தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலாவது கோலி அதிக ரன்களை குவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications