மும்பை: 2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இணைந்துள்ளனர். அதேபோல் நட்சத்திர வீரர் விராட் கோலி நடப்பாண்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக ஹோம் சீசனை இந்திய அணி மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸ்களில் சேர்த்து 12 ரன்களையும், விராட் கோலி இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 23 ரன்களையும் மட்டுமே சேர்த்திருந்தனர். இதனால் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
துலீப் டிராபி தொடரில் இருவரும் விளையாடி இருக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியை பொறுத்தவரை இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 இரட்டை சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 1,099 ரன்களை விளாசி இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 1,001 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 940 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகவும் பின் தங்கியிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், சிவம் துவே உள்ளிட்டோர விடவும் விராட் கோலி பின் தங்கி இருக்கிறார். நடப்பாண்டில் 17 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 319 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இவரை விடவும் ஜடேஜா 13 இன்னிங்ஸ்களில் 353 ரன்களையும், சிவம் துபே 16 இன்னிங்ஸ்களில் 330 ரன்களையும், ரிஷப் பண்ட் 13 இன்னிங்ஸ்களில் 376 ரன்களையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.