வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதற்கு எங்களை குறை சொல்வதா? விராட் கோலியை பார்த்து கத்துக்கனும்- லட்சுமண்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் தலைவருமான விவிஎஸ் லட்சுமண், விராட் கோலியின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மைதானத்தில் விராட் கோலி தனக்கென நிர்ணயித்துள்ள விசயங்களே அவரை இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய லட்சுமண், தனது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் கோலி காட்டி வரும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். "விராட் கோலி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியான தொழில்முறை வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் எந்த அணிக்காக விளையாடினாலும், தனக்கென வகுத்துள்ள உயரிய தரத்தை எட்ட ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கடுமையாக முயற்சி செய்கிறார்."

"இதனால்தான் அவர் ஒரு சிறந்த ரோல் மாடலாக விளங்குகிறார். ஏராளமான இளம் வீரர்கள் அவரைப் போலவே வர விரும்புகிறார்கள்," என்று லட்சுமண் புகழாரம் சூட்டினார். இளம் வீரர்களின் உடற்தகுதி மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வரும் கால அளவுகள் குறித்தும் முன்னாள் இந்திய வீரரான லட்சுமண் விவாதித்தார்.
கடுமையான உடற்தகுதி தேவைகள் மற்றும் மனித உடலின் கணிக்க முடியாத தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வீரர்கள் முழுமையாக உடற்தகுதி பெறுவதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.
"ஒரு வீரர் காயத்திலிருந்து எவ்வாறு குணமடைந்து வருகிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்பவே உடற்பயிற்சிகளின் சுமை அதிகரிக்கப்படுகிறது. ஒரு வீரருக்கு காயம் கண்டறியப்பட்டது முதல், அவர் குணமடைந்து சிறப்பு மையத்திலிருந்து தகுதிச் சான்றிதழ் பெற்று வெளியேறும் வரை இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்," என்று லட்சுமண்விளக்கினார்.
இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலரும் அடிக்கடி காயம் அடைவதாக புகார் எழுந்துள்ளது,. மேலும், பிசிசிஐ சிறப்பு மையத்தில் உடல் தகுதியை பெற்று விட்டார் என்று சான்றிதழ் அளிக்கப்படும் வீரர்கள், மீண்டும் காயம் அடைகின்றனர். இதனால் அணியை கட்டமைக்க முடியாமல் பயிற்றியாளரும், தேர்வுக்குழுவினரும் தடுமாறி வருகின்றனர். இதனால் பிசிசிஐ சார்பாக விசாரணை நடத்தப்படும் வரும் சூழலில் தான் விராட் கோலி உடல்தகுதி குறித்து லட்சுமண் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications

