சென்னை: ஐபிஎல் வரலாற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் முகமாக திகழ்ந்து வருபவர் 'கிங்' விராட் கோலி. கடந்த சீசனில், தனது நீண்ட கால கனவான ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக ஆர்சிபி-க்கு வென்று கொடுத்து இருந்தார். இந்த நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் மாறப் போவதாகவும், புதிய நிறுவனத்திடம் ஆர்சிபி அணியை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உரிமையாளர்கள் மாறினால் விராட் கோலி ஆர்சிபி அணியை விட்டு விலகும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்தே ஓய்வு பெறுவார் என்று ஊகங்கள் எழுந்தன. சமீபத்தில், விராட் கோலி பற்றி வெளியான ஒரு செய்தி, அவரது ஓய்வு குறித்து ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆர்சிபி நிர்வாகம் வழங்கிய புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் (Commercial Contract) விராட் கோலி கையெழுத்திட மறுத்துவிட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் என்பது, ஒரு வீரரின் விளையாடும் ஒப்பந்தத்திலிருந்து (Playing Contract) முற்றிலும் வேறானது. இது, அணியின் விளம்பரங்கள், பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் விளம்பரக் கடமைகள் தொடர்பான ஒரு துணை ஒப்பந்தமாகும். இதன் மூலம் அந்த வீரருக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இந்தச் செய்தி, "கோலி ஆர்சிபி அணியிலிருந்து விலகப் போகிறாரா? அல்லது ஐபிஎல்-லிலிருந்தே ஓய்வு பெறப் போகிறாரா?" என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும், கடந்த சீசனில் கோப்பையை வென்ற பிறகு, ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள், அணியை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியதால், இந்தச் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.
இந்த வதந்திகளுக்குத் தனது யூடியூப் சேனலில் பதிலளித்த கிரிஸ் ஸ்ரீகாந்த், கோலியின் ஓய்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "இவை அனைத்தும் வெறும் ஊகங்கள்தான். ஏனென்றால், அவர் (கோலி) இப்போதுதான் ஆர்சிபி-க்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதனால், அவர் ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. இவை அனைத்தும் வெளிப்படையான வதந்திகள்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
அணியின் உரிமை மாற்றம் குறித்துப் பேசிய அவர், "இவை வெறும் வணிக ரீதியான முடிவுகள். ஆனால், விராட் கோலியை பொறுத்தவரை, அவர் நிச்சயம் ஆர்சிபி அணியில்தான் தொடர்வார்" என்று உறுதியாகத் தெரிவித்தார் ஸ்ரீகாந்த்.
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, 17 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையுடன், ஆர்சிபி-யின் அசைக்க முடியாத தூணாக கோலி திகழ்கிறார். "நான் வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன்," என்று அவர் பலமுறை தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவரது ஓய்வு குறித்த கேள்விக்கே இடமில்லை என்று கூறும் ஸ்ரீகாந்த், "அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்? இந்த ஐபிஎல்-லில் கூட அவர் அற்புதமாக விளையாடினார். ஒருவேளை, அவர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்தால் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. விராட் கோலி, இன்னும் மூன்று ஆண்டுகள் ஐபிஎல் விளையாடும் அளவிற்குத் தகுதியுடன் இருக்கிறார். அவர் 'கிங் ஆஃப் கிங்ஸ்'; எப்போதுமே ரன் குவிப்பார்" என்று புகழாரம் சூட்டினார்.
37 வயதான விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 8661 ரன்களைக் குவித்துள்ள வீரராகத் திகழ்கிறார். வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததற்குக் காரணம், ஆர்சிபி அணியில் நடக்கவிருக்கும் உரிமை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றும், புதிய உரிமையாளர்கள் வரும்போது பேச்சுவார்த்தை நடத்தவே கோலி காத்திருக்கிறார் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.