பெங்களூர்: ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்இ சுரேஷ் ரெய்னா, விராட் கோலி குறித்து அதிரடியான கருத்தை தெரிவித்தார்.பல வருட ஏமாற்றங்களுக்குப் பிறகு 2025ல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி, 2026 சீசனை வெறியுடன் அணுகுகிறது. இந்த சூழலில், ஐபிஎல் கோப்பையை ஒருமுறை வென்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதை மீண்டும் தக்கவைப்பது கடினமான பணி என ரெய்னா குறிப்பிட்டார்.
"ஆர்சிபி வெற்றி ஒரே சீசன் அதிரடி" என்று யாரும் கூறக்கூடாது என்பதில் விராட் கோலி உறுதியாய் இருப்பார் என ரெய்னா தெரிவித்தார். கோலியின் இந்த வெற்றிக்கான தீவிர பசி ஒட்டுமொத்த அணியையும் வழிநடத்தும் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய சுரேஷ் ரெய்னா ,"விராட் கோலி சின்னசாமி மைதானத்தை அடைந்தவுடன், அவரது முதல் கேள்வி, 'இந்த பட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும், எந்த வீரர்கள் செயல்படுவார்கள்?' என்பதாகத்தான் இருக்கும். அதுதான் அவரது மனநிலை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், 'இது எங்கள் அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல, இதற்காக நாங்கள் மிகவும் உழைத்தோம்' என்று சொல்வார்" என்றார்.

"ஏற்கனவே 7-8 வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடியுள்ளனர். சிஎஸ்கே 2010 மற்றும் 2011ல் அடுத்தடுத்து வென்றபோது, எங்களிடமும் அதேபோல 7-8 இந்திய வீரர்கள் இருந்தனர். வெங்கடேஷ் ஐயர் அணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். தேவ்தத் படிக்கல் அபாரமான ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்கள் குவித்து வருகிறார். ஆர்சிபியின் சிறந்த அம்சம் அவர்களுக்கு ஒரு சீரான பேட்டிங் வரிசை இருப்பதுதான்" என்று ரெய்னா குறிப்பிட்டார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பெங்களூரூவின் எம். சின்னசாமி மைதானத்தில் ஐந்து, ராய்ப்பூரில் இரண்டு என உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளது. கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு, பெங்களூரு மைதானம் மீண்டும் போட்டிகளை நடத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன்கள் மார்ச் 28 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறார்கள்.

புதிய சீசனுக்கு முன்னதாக, ஆர்சிபி அணி விற்கப்பட உள்ளது. இந்த செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.அதில் ஒன்று ஸ்வீடனைச் சேர்ந்த பெரிய முதலீட்டு நிறுவனம். மற்றொன்று, சுகாதாரத் துறையில் நன்கு அறியப்பட்ட ரஞ்சன் பாய் மற்றும் அமெரிக்க, சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவாகும். முன்னதாக ஆர்வம் காட்டிய பிரபலமான பெயர்கள் தற்போது போட்டியில் இருந்து விலகிவிட்டன.