மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 36 வது வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி மொத்தம் 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 30 சதமும், 31 அரை சதமும் அடங்கும்.
இந்த தருணத்தில் விராட் கோலி எப்போதுமே ரெக்கார்டுக்காக விளையாடுவார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படும். விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை விளையாடி இருக்கிறார் என அவரை பிடிக்காதவர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதை எல்லாம் பொய் என்று விராட் கோலி நிரூபித்திருக்கிறார். அதாவது விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை தொட இன்னும் 770 ரன்கள் தான் தேவைப்படுகிறது. இதனை விராட் கோலி இந்த ஆண்டு முழுவதும் விளையாடினால் கூட எட்டி விடலாம்.
ஆனால் விராட் கோலி அதைப்பற்றி கவலைப்படாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றே மூன்று இந்திய வீரர்கள் மட்டும்தான் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கவாஸ்கர் ஆகிய இந்த வீரர்களின் பட்டியலில் கோலி சேர்ந்திருப்பார்.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை மொத்தமாகவே ஏழு கிரிக்கெட் வீரர்கள் தான் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்து இருக்கிறார்கள். இந்த மகத்தான சாதனையை விராட் கோலிக்கு படைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அதையும் விராட் கோலி செய்யாமல் விட்டுவிட்டார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடிப்பது தன்னுடைய இலக்கு என்று விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அதனை எட்டாமலேயே தற்போது விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விராட் கோலியின் இந்த முடிவு, இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு வெற்று இடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.