ரூ.110 கோடி விளம்பர ஒப்பந்தம்.. முடிவுக்கு கொண்டு வரும் விராட் கோலி? எல்லாம் நட்புக்காக தானாம்!
மும்பை: பூமா நிறுவனத்துடனான ரூ.110 கோடி மதிப்பிலான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் வீரர்களில் அதிகளவிலான வருவாயை ஈட்டி வருபவர் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக விராட் கோலியே இருந்து வருகிறார். சச்சின், தோனிக்கு பின் அதிகளவிலான விளம்பர நிறுவனங்கள் விராட் கோலியை ஒப்பந்தம் செய்து வந்தன.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பிரபல நிறுவனமான பூமா விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது. 8 ஆண்டுகளுக்கு சேர்த்து ரூ.110 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பூமா நிறுவனம் விராட் கோலியுடன் மேற்கொண்டது. இந்திய விளையாட்டு வரலாற்றில் ரூ.100 கோடிக்கு மேல் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.14 கோடி வரை வருவாய் ஈட்டி வந்தார் விராட் கோலி. இந்த பூமா நிறுவனத்துடனான ஒப்பந்தம் நடப்பாண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாத விராட் கோலி, இந்திய நிறுவனமான அஜிலிடஸ் ஸ்போர்ட்ஸ் என்று நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் இயக்குநராக அபிஷேக் கங்குலி செயல்பட்டு வருகிறார். இவர் பூமா நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநராவார். இவர் இயக்குநராக இருந்த போது தான் விராட் கோலியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது அபிஷேக் கங்குலி, பூமா நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக அஜிலிடஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை கடந்தாண்டு தொடங்கினார்.
இந்த நிறுவனத்தில் கடந்த மே மாதத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான முதலீடுகள் குவிந்தன. இந்த நிலையில் விராட் கோலி அஜிலிடஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் மாறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அபிஷேக் கங்குலி உடனான நட்பு காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் தனது நீண்ட நாள் மேனேஜரான பன்டி சஜ்டேவிடம் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications