மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று மும்பையில் டி20 உலக கோப்பை வென்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருடைய மொபைல் வால்பேப்பரில் இருந்தது யார் என்று ரசிகர்கள் நோட்டம் விட்டனர்.அதில் ஒரு பெரியவரின் புகைப்படம் இருந்தது.
இது யாராக இருக்கும் ஏன் விராட் கோலி இவருடைய படத்தை வைத்திருக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் யார் என்று தற்போது நாம் பார்க்கலாம். நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடும் விராட் கோலி ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருக்கின்றார்.

அனைத்து மதத்திற்கும் மரியாதை கொடுக்கும் விராட் கோலி தீவிர சிவன் பக்தனாக விளங்குகிறார். விராட் கோலி பல்வேறு கோயில்களுக்கு சென்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் விராட் கோலி நீம் கரோலி பாபா என்ற சாமியாரின் தீவிர பக்தனாக இருக்கிறார்.
நீம் கரோலி பாபா என்பவர் தீவிர அனுமான் பக்தராக இருந்தவர். 1900 ஆம் ஆண்டு பிறந்த நீம் கரோலி பாபா 1973 ஆம் ஆண்டு மோட்சம் அடைந்தார். அவருடைய புகைப்படம் தான் கோலியின் மொபைலில் வால்பேப்பர் ஆக இருக்கின்றது. நீம் கரோலி பாபா, ராம் தாஸ், பகவான் தாஸ் போன்ற பிரபலங்களுக்கு குருவாகவும் இருந்திருக்கிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த நீம் கரோலி பாபாவின் உண்மையான பெயர் லக்ஷ்மன் நாராயணன் சர்மா.
இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணமாகிவிட்டது. இதை அடுத்து ஆன்மீகத்தின் மீது ஏற்பட்ட நாட்டத்தால் சாமியாராக சென்று இருக்கிறார். இதனை அடுத்து இவருடைய தந்தை வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் மீண்டும் திருமண பந்தத்தில் ஈடுபட்டு இரண்டு மகன் ஒரு மகளுக்கு தந்தையாக இருந்திருக்கிறார்.
இதை அடுத்து 1958 ஆம் ஆண்டு மீண்டும் கடவுள் மீது உள்ள விருப்பத்தால் சாமியாராக சென்று இருக்கிறார். இவரை இவருடைய பக்தர்கள் மகாராஜ் என்று அழைப்பார்களாம். ஒருமுறை நீம் கரோலி பாபா ரயிலில் டிக்கெட் இல்லாமல் சென்றிருக்கிறாராம். அப்போது டிடிஆர் டிக்கெட் இல்லாததால் கீழே இறங்குங்கள் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து நீம் கரோலி பாபாவும் ரயிலை விட்டு இறங்கி விட்டாராம்.
ஆனால் அதன் பிறகு ரயில் புறப்படவே இல்லையாம். எவ்வளவோ முயற்சி செய்தும் ரயில் புறப்படாமல் போனது என்ன காரணம் என்று ரயில் ஓட்டுனர்கள் முழித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போதுதான் அங்கு இருந்தவர்கள் நீங்கள் சாமியாரை கீழே இறக்கி விட்டதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை ரயிலில் ஏறச் சொல்லுங்கள் என்று கூறினார்களாம்.
இதன் அடுத்து மீண்டும் ரயிலுக்குள் வாருங்கள் என்று அழைத்த போது அவர் நீம் கரோலி என்ற இடத்தில் நீங்கள் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் ரயிலில் வரும் சாமியார்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்டதை அடுத்து மீண்டும் அவர் ரயிலில் ஏறியிருக்கிறார். அப்போது நான் இறங்கியதால் தான் ட்ரெயின் புறப்படவில்லை என்று நினைக்கிறீர்களா என்று கூறி நகைச்சுவையாக சிரித்தாராம்.
ஆனால் பாபா ரயிலில் ஏறிய பிறகு தான் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றதாம். இருக்கும் வரை மற்றவர்களுக்கு சேவை புரியுங்கள். அன்பை விதையுங்கள் என்ற தத்துவத்தை நீம் கரோலி பாபா போதித்திருக்கிறார். இவரைப் பார்த்து பல வெளிநாட்டவர்கள் இந்து மதத்தை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாமியாரின் புகைப்படத்தை தான் விராட் கோலி தனது வால்பேப்பரில் வைத்திருக்கிறார்.