சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சுழற் பந்துவீச்சாளர் மெஹிதி ஹசன் மிராசின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சரியாக ரன் குவிப்பதில்லை என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் அதிக முறை அவுட் ஆகி இருக்கும் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் ரன் குவிக்க திணறி வருகிறார் என்ற விமர்சனம் உள்ளது. 2020 கொரோனா லாக்டவுனுக்கு பின் விராட் கோலி ஃபார்ம் இழந்தார். அப்போது முதல் அவர் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.
2021 ஆம் ஆண்டு முதல் ஆசிய கண்டத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 18 முறை சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் 1094 பந்துகளை சந்தித்து 499 ரன்கள் மட்டும் எடுத்து இருக்கிறார். இதில் அவரது பேட்டிங் சராசரி 27.72 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 45.61 ஆக உள்ளது. அவரது வழக்கமான ஸ்ட்ரைக் ரேட்டை விட சுழற் பந்துவீச்சாளர்களிடம் அவர் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், சுழற் பந்துவீச்சாளர்களிடம் அதிக முறை ஆட்டம் இழந்தும் இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் எந்த பயிற்சி போட்டிகளிலும் ஆடுவதில்லை, உள்ளூர் போட்டிகளிலும் ஆடுவதில்லை என்ற விமர்சனம் வலுத்து இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டது.
அதில் முதல் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த பல வீரர்கள் இடம் பெற்று ஆடினர். ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் அந்த உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் விளையாடவில்லை என பிசிசிஐ சப்பை கட்டு கட்டினாலும் அவர்கள் இருவருமே டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமே 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். கோலி நீண்ட காலமாகவே சுழற் பந்துவீச்சாளர்களை சந்திப்பதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். அப்படி இருந்தும் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதில்லை. அந்த விமர்சனம் இப்போது மேலும் வலுப்பெற்றுள்ளது.