டெல்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த குளிர்காலம் ஒரு கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி மற்றும் அதிரடி மன்னன் ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளனர். இதில் விராட் கோலி எத்தனை போட்டிகளில் பங்கேற்க உள்ளார்? அந்த போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கம் (DDCA) வெளியிட்டுள்ள உத்தேச வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச போட்டிகளில் பிஸியாக இருந்த விராட் கோலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெல்லி அணிக்காக 50 ஓவர் உள்ளூர் போட்டியில் விளையாடவுள்ளார்.

கடைசியாக 2013-ம் ஆண்டு என்.கே.பி சால்வே சேலஞ்சர் டிராபியில் விளையாடினார். அதன்பிறகு இப்போதுதான் அவர் லிஸ்ட்-ஏ (List-A) கிரிக்கெட்டில் உள்ளூர் அணிக்காக பேட் பிடிக்கவுள்ளார்.
விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. டெல்லி கிரிக்கெட் சங்க வட்டாரத் தகவலின்படி, அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஆனால், ரிஷப் பண்ட் தொடர் முழுவதும் டெல்லி அணியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்ட் கடைசியாக 2018-ல் டெல்லிக்காக லிஸ்ட்-ஏ போட்டியில் ஆடியிருந்தார்.
டெல்லி அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சின்னசாமி மைதானம் விராட் கோலியின் இரண்டாவது வீடு போன்றது. ஆர்சிபி (RCB) அணிக்காக அவர் அங்கு ஆடிய இன்னிங்ஸ்கள் ஏராளம்.
ஐபிஎல் அல்லாத ஒரு போட்டியில், அதுவும் டெல்லி ஜெர்சியில் கோலி சின்னசாமி மைதானத்தில் ஆடுவதைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களை ரசிகர்கள் நெரிசல் மறந்து, கோலியின் வருகை அந்த இடத்தையே திருவிழாவாக மாற்றும்.
விஜய் ஹசாரே டிராபி வரும் டிசம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி டிசம்பர் 24 அன்று டெல்லி மற்றும் ஆந்திரா இடையே எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது.
விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஆடும் லெவனில் இணைந்தால், டெல்லி அணி பலம் வாய்ந்த அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இளம் வீரர்களுக்கு இவர்களுடன் விளையாடுவது ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும்.