எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல.. ஹர்திக் பாண்ட்யா சொன்ன அந்த வார்த்தைகள்.. விராட் கோலி நெகிழ்ச்சி!
மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில், நம்பிக்கை இழந்துவிட்ட தனக்கு ஹர்திக் பாண்ட்யா தான் உதவியதாக விராட் கோலி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்க்க, இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்களை சேர்த்து த்ரில் வெற்றி பெற்றது.

பேட்டிங் சொதப்பல்
சுலபமாக விரட்டக்கூடிய இலக்கு தான் என்று களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. கே.எல்.ராகுல் (4), ரோகித் சர்மா (4), சூர்யகுமார் யாதவ் (15), அக்ஷர் பட்டேல் (2) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என ரசிகர்கள் கவலைக்கு சென்றுவிட்டனர்.

த்ரில் வெற்றி
ஆனால் அதனை மாற்றி இந்திய அணியை மீட்டுக் கொண்டு வந்தனர் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி. அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரும் 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கோலி நெகிழ்ச்சி
இந்நிலையில் தனது இன்னிங்ஸ் குறித்து கோலி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில், இது நம்ப முடியாத சூழலாக இருக்கிறது. பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எப்படி நடந்தது என்பதே எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியா 4 விக்கெட்களை இழந்தவுடன் என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்போது ஹர்திக் பாண்ட்யா தான் எனக்கு பக்க பலமாய் இருந்தார்.

அப்படி என்ன செய்தார்
என்னிடம் தொடர்ச்சியாக, " விராட், நாம் கடைசி வரை நின்று விளையாடினால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும் எனக்கூறி கொண்டே இருந்தார். அதற்கேற்றார் போலவே ஒவ்வொரு ஓவரிலும் தனி தனியாக திட்டமிட்டு விளையாடினோம். நம்பிக்கை இல்லாத எனக்கு ஹர்திக்கின் வார்த்தைகள் மாற்றத்தை கொடுத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications