2027 உலககோப்பை உடன் ஓய்வு என்று சொன்னாரா விராட் கோலி? உண்மை என்ன?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் தனது முதல் உலகக் கோப்பையை விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற கோலி, இதுவரை 2011, 2015, 2019 மற்றும் 2023 ஆகிய நான்கு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் இவரிடமே உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இவர் 765 ரன்கள் குவித்து இச்சாதனையைப் படைத்திருந்தார்.
இந்திய அணிக்காக 314 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,941 ரன்களைக் குவித்துள்ள விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, ஜியோஸ்டார் தளத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான தனது திட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "50 ஓவர் உலகக் கோப்பையின் தீவிரம் என்பது எல்லாவற்றையும் விட மிக அதிகம். ஏனெனில், தற்போதைய சூழலில் டி20 போட்டியின் தீவிரத்தோடு 10 போட்டிகளில் விளையாடுவது போன்றதாகும். அதாவது, நீங்கள் ஒரே நாளில் 2.5 டி20 போட்டிகளை விளையாடுவதற்குச் சமம். இத்தகைய தீவிரத்தை ஒரு பெரிய உலகக் கோப்பைத் தொடரின் 10 போட்டிகளிலும் தொடர்ந்து தக்கவைப்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் இம்முறை வெளிநாட்டு மண்ணில் போட்டிகள் நடைபெறவிருப்பதால், இது கூடுதல் உழைப்பைக் கோரும்" என்று கோலி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, இதுவே நான் இந்தியாவிற்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர். இதுவே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறது. எனது முழுத் திறனையும் களத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன். உலகக் கோப்பையை வெல்வதே எங்களின் இறுதி இலக்கு. அதற்காக என்ன செய்ய வேண்டியிருந்தாலும் நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications


