மீண்டும் உலகக்கோப்பை போச்சுன்னு நினைச்சோம்.. அந்த கடைசி 5 ஓவரில்.. நெகிழ்ந்த விராட் கோலி
மும்பை: 2024 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து மும்பையில் இந்திய வீரர்கள் உலகக்கோப்பையுடன் ஊர்வலம் வந்தனர். அதன் முடிவில் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய விராட் கோலி, "உங்களைப் போலவே நாங்களும் ஒரு கட்டத்தில் உலகக் கோப்பை மீண்டும் கையை விட்டு போய்விடுமோ என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் இரண்டு ஓவர்கள் பந்து வீசிய இவரால் போட்டியில் வென்றோம்" என்று கூறி இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரை பாராட்டினார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேஸிங் செய்து வந்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அதை குறிப்பிட்டு பும்ராவை பாராட்டி இருக்கிறார் விராட் கோலி. இது குறித்து பேசுகையில், "மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது." என்று பாராட்டினார் விராட் கோலி. இந்த விழாவில் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினார் விராட் கோலி.


Click it and Unblock the Notifications