மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது ஒரு புதிய கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. முன்னாள் வீரர்களான டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற இளம் வீரர்கள் அணியில் இணைந்து புதிய மாற்றங்களை உருவாக்கினர். தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு மாற்றத்தின் காலகட்டத்தில் இந்திய அணி உள்ளது.
விராட் கோலி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோது, தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த். கோலியின் ஓய்வு குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், "விராட் கோலி ஒரு தனித்துவமான திறமை கொண்ட வீரர். அவரிடம் நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை முழுமையாக இருந்தன," என்று கூறினார்.

"அவரது திறமையை உணர்ந்து நான் அவருக்கு வாய்ப்பு வழங்கினேன். ஆஸ்திரேலிய மண்ணில் பல வீரர்கள் திணறியபோது, கோலி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவரை தேர்வு செய்தபோது, எதிர்காலத்தில் அவர் மாபெரும் வெற்றிகளைப் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், அப்போது எனக்கு போதிய ஆதரவு இல்லை.
இப்போது கோலி பல சாதனைகளைப் படைத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்," என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
கேப்டன் பொறுப்பை வழங்கியிருப்பேன்
"நான் இப்போதும் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால், கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன்.
தற்போது இந்திய டெஸ்ட் அணி சற்று தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில், கோலியை அணியை மீட்டெடுக்கச் செய்து, பின்னர் ஓய்வு பெறச் சொல்லியிருப்பேன். குறிப்பாக, இங்கிலாந்து தொடரில் கோலியை விளையாட வைக்க தேர்வுக் குழு வற்புறுத்தியிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"நான் அந்தப் பொறுப்பில் இருந்திருந்தால், கோலியை கேப்டனாக நியமித்து, அவருக்கு ஒரு சிறந்த முடிவை உருவாக்கியிருப்பேன்," என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். கோலியின் ஓய்வு காரணமாக, இங்கிலாந்து தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.