மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி, அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் காட்டி வரும் அதிரடி ரன் குவிப்பு ரசிகர்களை மெிரள வைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து, விராட் கோலி குறித்து உருக்கமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் சதம் மேல் சதம் அடித்து வரும் விராட் கோலியைப் பார்த்து வியந்துபோன சித்து, கடவுளிடம் தனக்கு ஒரு வரம் கிடைத்தால் என்ன கேட்பேன் என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், "கடவுள் எனக்கு ஒரு வரம் அளிப்பார் என்றால், விராட் கோலியை அவரது ஓய்வு முடிவை திரும்பப் பெறச் செய்து, மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வைக்கும்படி கேட்பேன். 150 கோடி இந்திய மக்களுக்கும் இதைவிட பெரிய மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் வேறு எதுவும் இருக்க முடியாது. 20 வயது இளைஞனைப் போன்ற உடற்தகுதி அவரிடம் இருக்கிறது. அவர் 24 கேரட் தங்கம்" என்று சித்து நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 2025-ல் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில், பெர்த் டெஸ்டில் சதம் அடித்ததைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அவரால் சோபிக்க முடியவில்லை. குறிப்பாக, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை அடிக்க முற்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தார். இந்தத் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு, திடீரென டெஸ்ட் ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கோலி எட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 123 போட்டிகளில் 9230 ரன்களுடன் (சராசரி 46.85) அவர் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டைத் துறந்தாலும், ஒருநாள் போட்டிகளில் கோலி பழைய பன்னீர்செல்வமாக மாறிவிட்டார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி 'தொடர் நாயகன்' விருது வென்றார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்கி 131 மற்றும் 77 ரன்கள் குவித்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
சித்து மற்றும் ரசிகர்களின் ஆசை ஒருபக்கம் இருந்தாலும், விராட் கோலி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ராஞ்சியில் நடந்த போட்டிக்குப் பிறகு இதுகுறித்து வதந்திகள் பரவியபோது, "டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடும் திட்டம் இல்லை. எனது கவனம் முழுவதும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே உள்ளது" என்று கோலி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனினும், "கிங் கோலி" மீண்டும் வெள்ளை உடை அணிந்து களமிறங்க மாட்டாரா என்ற ஏக்கம் சித்துவைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்களிடமும் உள்ளது என்பதே நிதர்சனம்.