மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணிக்கும் 4 ரீடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கடந்த மெகா ஏலத்தை போல் இத்தனை இந்திய வீரர்கள், இத்தனை வெளிநாடு வீரர்கள் என்ற எந்த நிபந்தனையும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், இறுதி முடிவை அணி நிர்வாகங்களே எடுக்கலாம் என்று விட வாய்ப்புகள் உள்ளது. இது பல்வேறு அணிகளுக்கும் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தங்கள் அணியின் முக்கிய வீரர்களை கட்டமைக்கும் பட்சத்தில், அவர்களை சுற்றி எளிதாக புதிய அணியை கட்டமைக்க முடியும்.

அந்த வகையில் ஆர்சிபி அணி தரப்பில் 4 வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்தப் பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது நட்சத்திர வீரர் விராட் கோலி தான். இம்முறை விராட் கோலியின் ஊதியத்தை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. சீனியர் வீரராக இருப்பதால், அவருக்கான மரியாதை நிச்சயம் அளிக்க முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் தொடக்க காலம் முதலே விராட் கோலி விளையாடி வருகிறார். கடைசி வரை ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பதே விராட் கோலியின் விருப்பமாகும். இதனால் ஆர்சிபி அணி நிர்வாகம் விராட் கோலி ரிலீஸ் செய்ய வாய்ப்பே இல்லை. அதேபோல் 2வது இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவதோடு, சீனியர் வீரராகவும் உயர்ந்துள்ளார். ஒரே ஸ்பெல்லில் எந்த அணியையும் கதையை முடிக்கும் வல்லமை சிராஜ்-க்கு இருப்பதோடு, மெகா ஏலத்தில் சிராஜை வாங்குவது எளிதான விஷயமல்ல. இதனால் அவரை ஆர்சிபி அணி தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
தொடர்ந்து கடந்த சீசனில் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் பொளந்து கட்டிய ரஜத் பட்டிதரை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக ஆடிய 2 சீசன்களிலும் ரஜத் பட்டிதர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிஎஸ்கே அணியில் சிவம் துபே எப்படி ஸ்பின்னர்களை பொளந்து கட்டி வருகிறாரோ, அதேபோல் ரஜத் பட்டிதரும் ஸ்பின் ஹிட்டர்.
கடைசி இடத்தில் ஆர்சிபி அணி வில் ஜாக்ஸை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சீசனில் தாமதமாக வாய்ப்பினை பெற்றாலும் தனது முழு திறமையையும் வில் ஜாக்ஸ் வெளிப்படுத்தினார். ரஷித் கான் போன்ற ஒரு பவுலரையே எளிதாக அட்டாக் செய்து மிரட்டினார். இதனால் ஆர்சிபி அணி இவரை ரூ.7 கோடிக்கு வரை அளிக்க முன் வந்து தக்க வைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மேலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ், இளம் வீரர் யாஷ் தயாள் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் மூவரில் இருவருக்கு ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்கும். ஆனால் ஒருவரை வாங்குவதற்கு ஆர்சிபி அணி பெரிய தொகையை கொடுக்க வேண்டிய சூழல் வரும். இதனால் யாரை ஏலத்தில் வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.