மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி தானாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகவில்லை என்றும், அவர் அந்த முடிவை எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரபல வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், "கடினமான டெஸ்ட் போட்டிகளை விட்டுவிட்டு, எளிதாக ரன் குவிக்கக்கூடிய ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட கோலி முடிவு செய்துவிட்டார்" என்ற ரீதியில் விமர்சித்திருந்தார். ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் இன்றும் டெஸ்ட் போட்டிகளில் சதங்களை விளாசி வரும் நிலையில், கோலியின் இந்த முடிவு விமர்சனத்திற்கு உள்ளானது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மஞ்ச்ரேக்கரின் கருத்தை நான் ஏற்கமாட்டேன். கோலி டெஸ்ட் அணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார். அவர் தானாக இந்த முடிவை எடுத்துச் செல்பவர் அல்ல. அவர் விடைபெறுவதற்கான சூழல் அங்கு உருவாக்கப்பட்டது" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஓய்வு அறிவிப்பு வேண்டுமானால் அவர் வாயிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையை எல்லாம் தெரிந்து கொண்டே, அவர் ரன்களுக்காக எளிதான போட்டிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று எப்படிக் கூற முடியும்?" என்றும் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனி ஆளாகப் போராடிய கோலி
டெஸ்ட் ஓய்வு குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஒருநாள் போட்டிகளில் கோலி தனது பேட்டிங் மூலம் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
குறிப்பாகக் கடைசி ஒருநாள் போட்டியில் 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் கோலி தனி ஆளாகப் போராடினார். 108 பந்துகளில் 124 ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்காகக் கடைசி வரை முயற்சி செய்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி 296 ரன்களுக்குச் சுருண்டது.
விராட் கோலியின் சதம் வீணான நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஒருநாள் போட்டி ஆட்டம் மூலம் விராட் கோலி இந்திய ஒருநாள் அணியில் தனது இடத்தை நங்கூரம் போட்டு பிடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அவர் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்காகவே தன்னை தயார் செய்து வருகிறார். அந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.