மும்பை: இன்றைய விராட் கோலியைப் பார்க்கும்போது, அமைதியும், முதிர்ச்சியும் தெரிகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அணியின் கேப்டனாக அவர் இருந்தபோது, களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர் ஆக்ரோஷமாக இருந்தார். எதிரணி வீரர்களை மட்டுமல்ல, தவறு செய்யும் பட்சத்தில் சொந்த அணி வீரர்களையே அவர் விட்டுவைக்க மாட்டார் என்பது பலரும் அறிந்ததே.
ஆனால், அந்த ஆக்ரோஷத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை, அவருடன் இணைந்து இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் 'யோ-யோ' டெஸ்ட் என்ற ஒரு வார்த்தை, பல சீனியர் வீரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்ததென்றால், அதற்கு முக்கியக் காரணம் கேப்டன் விராட் கோலி. வீரர்களின் உடற்தகுதி (Fitness) விஷயத்தில் அவர் எந்தவித சமரசத்திற்கும் தயாராக இல்லை. இந்த மனப்பான்மை, ரன்னிங் பிட்வீன் விக்கெட்டுகளில் அப்பட்டமாக வெளிப்படும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, "ரன் ஓடும்போது, ஒரு வீரர் சோம்பேறித்தனமாக இருந்தால், கோலி அவரை திட்டி விடுவார். இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது ஒரு வீரர் மூச்சு வாங்கினால், கோலி மூன்றாவது ரன்னுக்குத் தயாராக நிற்பார். உடனடியாக, 'முதலில் அந்த ஜிம்முக்கு போ, உடம்பை ஃபிட் ஆக்கு' என்று அந்த வீரருக்குச் செய்தி பறக்கும்" என்று கோலியின் கண்டிப்பைப் பற்றி ரவி சாஸ்திரி விவரித்தார்.
கோலியின் கோபம், வெறும் வார்த்தைகளோடு நிற்காது; சில சமயங்களில் அது எல்லை மீறும் அளவிற்குச் செல்லும் என்றும் ரவி சாஸ்திரி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
"சில சமயங்களில், நான்தான் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் போதும், அவர் தனது இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்துவிடுவார். நான், 'அமைதியா இருப்பா... அவன் பாதி தூரம் வரட்டும். ஸ்டம்பிலிருந்து 10 அடி தூரத்தில் இருக்கும்போதே அவனைப் பார்க்க போகாதே. பவுண்டரி லைன் அருகே வரட்டும், பிறகு பேசு,' என்று சொல்வேன்" என்று ரவி சாஸ்திரி கூறினார்.
மேலும் அவர், "அவர் ஒரு சூடான தகரத்தின் மீது நிற்கும் பூனையைப் போலத் துடிப்பார்; களத்திற்குள் சென்று அந்த வீரரைக் குத்து விடவும் (Punch) தயாராகிவிடுவார். அதுதான் உண்மையான விராட் கோலி" என்று ரவி சாஸ்திரி கூறியது, கோலியின் ஆக்ரோஷத்தின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கோலியின் இந்த சமரசமற்ற, ஆக்ரோஷமான அணுகுமுறைதான், இந்திய அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்தி சரித்திரம் படைத்தது இந்திய அணி. மேலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்தது.
அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும், சமீபத்தில் இந்திய அணி வென்ற இரண்டு ஐசிசி கோப்பைகளுக்கும், கோலி உருவாக்கிய அந்த வலுவான அடித்தளமே முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.