மும்பை: இந்திய கிரிக்கெட்டின் 'ரன் மெஷின்', 'கிங் கோலி' என ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தில், கோலியின் தாடி முழுவதும் நரைத்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது தோற்றம் மாறியுள்ளது. இது, "ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறாரா?" என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

36 வயதாகும் விராட் கோலி, கடைசியாக ஜூலை 10 அன்று யுவராஜ் சிங் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பொதுவெளியில் காணப்பட்டார். அதன் பிறகு ஒரு மாதத்திற்குள், தற்போது லண்டனில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது தாடி கணிசமாக நரைத்துப் போய் காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, "கிங் கோலிக்கு என்ன ஆனது?" என ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு ரசிகர், "வெள்ளை தாடி, மங்கிய கண்கள், களைப்பான முகம்... ஆம், இது லண்டனில் இருந்து கோலியின் லேட்டஸ்ட் பிக். மன்னன் தனது வாளை கீழே வைக்கத் தொடங்கிவிட்டார் போலும்!" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கோலியின் நரைத்த தாடி விவாதப் பொருளாக மாறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது நரைத்த தாடி கவனம் ஈர்த்தது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன், யுவராஜ் சிங் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கோலி, "நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் தாடிக்கு டை அடித்தேன். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் உங்கள் தாடிக்கு டை அடிக்க வேண்டிய நிலை வந்தால், ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது இதனைப் பலரும் நகைச்சுவையாகக் கடந்து சென்றாலும், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம், அவர் கூறியதன் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், இந்த ஆண்டு மே 12 அன்று யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் கோலி தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவரது இந்த புதிய தோற்றம், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. "ஒருநாள் ஓய்வு லோடிங்?" என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வங்கதேசத்துக்கு எதிரான இந்திய சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டதால், கோலியின் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் தாமதமாகியுள்ளது. அவர் அடுத்ததாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து பிசிசிஐ விரைவில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணிக்கு பல சரித்திர வெற்றிகளைத் தேடித் தந்த கிங் கோலி, இன்னும் சில காலம் கிரிக்கெட் களத்தில் தனது ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.