மும்பை: விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், அவர் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவாரா அல்லது ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவிக்க அழுத்தம் கொடுக்கப்படுமா? என அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இது குறித்து பல்வேறு காரணங்களையும் வெளியிட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் ஓய்வு அறிவிக்கவில்லை. அவர் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது.

2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை இந்திய அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடும் எனக் கூறப்படுகிறது. இதில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஒருநாள் தொடர்கள் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகபட்சம் 30 போட்டிகளில் தான் இந்திய அணி விளையாடும். இது சுமார் இரண்டரை ஆண்டு கால கட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளின் எண்ணிக்கை.
ஒரு வீரர் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், ஒரு ஆண்டுக்கு சுமார் 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அந்த 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடரில் மட்டும்தான் விராட் கோலி விளையாடுவார். இது சரியாக இருக்குமா என்பதே அனைவருக்கும் உள்ள சந்தேகம். ஒருவேளை பிசிசிஐ எப்படி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை வெளியேற்ற அழுத்தம் கொடுத்ததோ, அது போன்ற ஒரு விஷயம் ஒருநாள் போட்டிகளிலும் நடக்கலாம் என ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து விராட் கோலி ரசிகர்கள் வெளியிட்டுள்ள சில பதிவுகளைப் பார்க்கலாம்.
"ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகளில் வர உள்ளது. தற்போதைய மூன்று ஆண்டு ஐபிஎல் தொடர் சுழற்சியும் 2027 உடன் முடிவடையும். எனவே இதுதான் விராட் கோலியின் கடைசி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். அவர் ஐபிஎல் கோப்பை வென்றாலும் இல்லாவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் எப்படி விளையாடினாலும், நாம் அவரை எதுவும் சொல்லாமல் அவரது ஆட்டத்தை ரசிக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார் ஒரு ரசிகர்.
மற்றொரு ரசிகர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதையும், மறுபுறம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட உள்ளது எப்படி மாறிவிட்டது எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"ஏற்கனவே டி20-யில் ஓய்வு பெற்றுவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இன்னும் 2027 உலகக் கோப்பை மட்டும்தான் மீதம் உள்ளது. 'விராட் கோலி ஒரு சிங்கம் போல வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. அது நடக்காது. குறைந்தபட்சம் விராட் கோலி ஓய்வு பெறும் கடைசி போட்டியை அனைவரும் பார்க்கும் வகையில் செய்யுங்கள்'" என்று கோரிக்கை வைத்துள்ளார் ஒரு ரசிகர்.
மற்றொரு விராட் கோலி ரசிகரோ பிசிசிஐக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். "2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு முன்னதாக அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடும் வகையில் அட்டவணையை மாற்றியமையுங்கள். குறைந்தபட்சம் விராட் கோலி 100 சர்வதேச சதங்களை எட்டுவதற்கு அது உதவியாக இருக்கும். இதுதான் எனது ஒரே நம்பிக்கை" என்று கூறியிருக்கிறார்.
விராட் கோலி இன்னும் 19 சதங்கள் அடித்தால் தான் 100 சர்வதேச சதங்களை எட்டுவார். விராட் கோலி 19 ஒருநாள் சதங்களை அடிக்க வேண்டும் என தான் ஆசைப்படுவது மிகவும் வெட்கமே இல்லாத செயலாக இருப்பதாக ஒரு ரசிகர் தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு விராட் கோலி ரசிகர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறி இருக்கிறார். இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (RCB) ஐபிஎல் கோப்பை வென்றால், விராட் கோலி இந்த ஆண்டுடன் ஐபிஎல்-இல் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என சுட்டிக்காட்டி இருக்கிறார். அதற்கும் சாத்தியங்கள் உள்ளன.