பெங்களூர்: 2025 ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குள் புதிய உரிமையாளர்களின் கைக்கு மாற இருப்பது உறுதியாகியுள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர்களான டியாகோ (Diageo) நிறுவனம், ஆர்சிபி-யின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை விற்கும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், இந்த விற்பனை செயல்முறை மார்ச் 31, 2026-க்குள் நிறைவடையும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
17 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு முதல்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றிய உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆர்சிபி அணி தனது உச்சபட்ச புகழில் இருக்கும்போது, உரிமையாளர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் 'கிங்' விராட் கோலியின் ஓய்வு முக்கிய காரணமாக இருக்கலாம் என விளையாட்டுத் துறை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு முதல், விராட் கோலி ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அவர் வெறும் ஒரு வீரர் என்பதைத் தாண்டி, அந்த அணியின் முகமாகவும், அடையாளமாகவும் மாறிவிட்டார். பல ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையிலும், அதன் பிராண்ட் மதிப்பு முதல் மூன்று இடங்களில் இருந்ததற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலியின் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளம்தான்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறையின் நிபுணரான இந்திரானில் தாஸ் பிளா இதுகுறித்துக் கூறுகையில், "கோப்பைகளை வெல்லாத போதிலும், விராட் கோலியால் மட்டுமே ஆர்சிபி முதல் மூன்று பிராண்டுகளில் ஒன்றாக நீடித்தது. அவரது ஓய்வு, எப்போது நிகழ்ந்தாலும், அது நிச்சயமாக அணியின் மதிப்பீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
அதாவது தற்போது இருக்கும் ஆர்சிபி அணியின் மதிப்பு, விராட் கோலியின் ஓய்வால் பெரிய அளவில் சரிந்து விடும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலை உணர்ந்துதான், தற்போதைய உரிமையாளர்கள் அணியின் மதிப்பு உச்சத்தில் இருக்கும்போதே வெளியேற நினைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 2024-ல் 227 மில்லியன் டாலராக இருந்த அதன் மதிப்பு, 18.5% உயர்ந்து 2025-ல் 269 மில்லியன் டாலராக ஆனது. இது ஐபிஎல் அணிகளிலேயே அதிகபட்ச வளர்ச்சியாகும்.
விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் மூன்று அல்லது நான்கு சீசன்களில் அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் ஓய்வு பெற்ற பிறகு, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு சரியும் அபாயம் உள்ளது. எனவே, கோலி அணியில் விளையாடும்போதே, அணியின் மதிப்பும் உச்சத்தில் இருக்கும்போதே விற்பனை செய்வது ஒரு புத்திசாலித்தனமான வணிக முடிவு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
டியாகோ நிறுவனம், தங்களது முக்கிய வணிகமான மதுபானத் தயாரிப்பில் கவனம் செலுத்தவே, விளையாட்டு போன்ற முக்கியமற்ற சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கோலியின் ஓய்வுக்குப் பிறகு, அணியின் நீண்டகால பிராண்ட் மதிப்பில் ஒரு நிச்சயமற்ற தன்மை உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
அதே சமயம், விராட் கோலி ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகும் ஆலோசகராகவோ அல்லது தூதராகவோ ஆர்சிபி அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்றும், அது ரசிகர்களின் விசுவாசத்தைத் தக்கவைக்க உதவும் என்றும் சில விமர்சகர்கள் நம்புகின்றனர்.