மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வு அறிவித்திருந்தார். அது குறித்து அவருடன் நெருக்கமாக இருப்பவரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விராட் கோலி சுமார் 14 ஆண்டு காலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் அறியப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார். இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், "நீங்கள் ஒரு இடத்தை விட்டுப் போகும்போதுதான் மக்களுக்கு நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பது புரியும்.

அவர் ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். அவரது ஓய்வு இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவருடன் சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்" என்றார் ரவி சாஸ்திரி.
விராட் கோலியுடன் பிசிசிஐ சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ஓய்வை அறிவித்தபோது யாரும் அவரை ஓய்வில் இருந்து பின் வாங்குமாறு சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது பிசிசிஐ அதிகாரிகள் சிலர் விராட் கோலியிடம் அவரை கேப்டனாக இருப்பதாக தெரிவித்ததாகவும், ஆனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முடிவில் அவருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலைகளால் மனம் வெறுத்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது. அவர் ஏப்ரல் மாதத்திலேயே ஓய்வு பெறும் முடிவை எடுத்த நிலையில், மே மாதம் தான் அதை அறிவித்தார். இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் பிசிசிஐ எந்த வகையிலும் அவரது ஓய்வை திரும்பப் பெறுமாறு கேட்கவில்லை.
மேலும், அவர் எந்த காரணத்திற்காக ஓய்வு அறிவிக்கிறார் என்பதையும் அவர்கள் விசாரிக்கவில்லை. அவரது ஓய்வு அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். அது குறித்து தான் ரவி சாஸ்திரி தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளது.